தமிழகம்

வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுகவுடன் மட்டுமின்றி எப்படி வேண்டுமானாலும் கூட்டணி அமையலாம்: பொன் ராதாகிருஷ்ணன் கருத்து

எல்.மோகன்

வருகிற சட்டப்பேரவைத் தேர்தலில் கூட்டணி என்பது சூழ்நிலையைப் பொறுத்தது. அது அதிமுக மட்டுமின்றி எப்படி வேண்டுமானாலும் அமையலாம் என முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

நாகர்கோவிலில் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், "முதல்வர் பழனிசாமியை முதல்வர் வேட்பாளராக அதிமுகவினர் ஒருங்கிணைந்து எடுத்த முடிவு பாராட்டத்தக்கது.

இதற்கு முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓபிஎஸ். ஆகியோருக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

பாஜக, அதிமுகவுடன் ஏற்படுத்திய கூட்டணி நாடாளுமன்ற தேர்தலின்போது ஏற்படுத்தப்பட்டது. அது உள்ளாட்சி மன்ற தேர்தலிலும், இடைத்தேர்தலிலும் நீடித்து வருகிறது.

2021 சட்டமன்ற தேர்தலின்போது பாஜகவின் அகில இந்திய தலைமை கூட்டணி குறித்து முடிவெடுக்கும். அதன் தலைமையிலேயே இந்த கூட்டணி அமையும்.

தேர்தல் நெருங்கி வரும்போது எங்களது கட்சியின் தலைமையிலோ, மற்றொரு கட்சியின் தலைமையிலோ கூட்டணி அமைய வாய்ப்பிருக்கிறது.

வரும் சட்டமன்ற தேர்தலுக்குப் பின்பு எவ்வித சந்தேகமும் இன்றி தமிழகத்தில் ஆட்சி அமைக்கப்போவது பாஜகவில் அங்கம் வகிக்கும் கூட்டணியே என்பது உறுதி. இது சூழ்நிலையைப் பொறுத்தது. எப்படி இருந்தாலும் தேர்தலுக்கு பின்பு பாஜக அங்கம் வகிக்கும் அரசாகவே தமிழக அரசு இருக்கும்.

அதிமுக., மட்டுமின்றி பாஜக அங்கம் வகிக்கும் கூட்டணி தி.மு.க.வோடு இருக்கலாம், இல்லாமலும் இருக்கலாம். எப்படி வேண்டுமானாலும் அமையலாம் தே.மு.தி.க., பாமக போன்றவை சொந்த பலத்தில் ஆட்சி அமைப்பதாகக் கூறியதை வரவேற்கிறோம். தற்போதைய கூட்டணி மாறுவதற்கும் வாய்ப்புள்ளது" என்றார்.

SCROLL FOR NEXT