கருத்தடை சிகிச்சையில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு அரசின் உதவித்தொகையை வழங்க, ரூ.2,500 லஞ்சம் வாங்கிய வழக்கில், சுகாதாரத் துறை பெண் உதவியாளருக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து சேலம் ஊழல் தடுப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே சூரியம்பாளையம் பகுதியைச் சேர்ந்த மணி (60) என்பவரின் மகள் மகேஸ்வரி (29). இரண்டு பெண் குழந்தைகளுக்குத் தாயான மகேஸ்வரி, கடந்த 2005-ம் ஆண்டு திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்து கொண்டார். எனினும், 2011-ம் ஆண்டு மகேஸ்வரி மீண்டும் கர்ப்பமடைந்தார்.
குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை தோல்வியடைந்தால், அரசு வழங்கும் இழப்பீடு தொகை ரூ.30 ஆயிரத்தைப் பெறுவதற்காக, மகேஸ்வரி விண்ணப்பித்தார். இது தொடர்பான விண்ணப்பத்தை, அவரது தந்தை மணி, சேலம் மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் அலுவலகத்தில், உதவியாளர் கலா என்பவரிடம் கொடுத்தார். விண்ணப்பத்தைப் பரிசீலிக்க ரூ.4,000 லஞ்சம் கேட்ட கலா, பின்னர் ரூ.2,500 பெற சம்மதித்தார்.
இது தொடர்பாக, சேலம் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறையில் மணி புகார் தெரிவித்தார். இதையடுத்து, லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸாரின் திட்டப்படி, 2011-ம் ஆண்டு ஜூலை 29-ம் தேதியன்று மணி கொடுத்த ரூ.2,500-ஐ, லஞ்சமாகப் பெற்ற உதவியாளர் கலாவை, இன்ஸ்பெக்டர் செல்வகுமார் தலைமையிலான லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் கைது செய்தனர்.
இந்த வழக்கை விசாரித்த சேலம் ஊழல் தடுப்பு தனி நீதிமன்ற நீதிபதி சுகந்தி, சுகாதாரத்துறை உதவியாளர் கலாவுக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.15 ஆயிரம் அபராதமும் விதித்து இன்று (அக். 07) உத்தரவிட்டார்.