இலங்கை தமிழ்ப் பேராசிரியர் ஸ்ரீ.பிரசாந்தன் 
தமிழகம்

டொரண்டோ பல்கலைக்கழகத் தமிழ் இருக்கையின் முக்கியத்துவம் என்ன?- இலங்கை தமிழ்ப் பேராசிரியர் ஸ்ரீ.பிரசாந்தன் விளக்கம்  

ஆர்.சி.ஜெயந்தன்

கனடா நாட்டின் நாடாளுமன்றம் கடந்த 2016-ம் ஆண்டு, ஜனவரி மாதத்தைத் தமிழ் மரபு மாதமாக அறிவித்தது. அதன்படி, ஜனவரி மாதம் தமிழ் மரபு மாதமாக கனடா தேசம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. கனடா நாட்டின் அரசு, இது சார்ந்த கொண்டாட்டங்களுக்கு நிதி வழங்கியும் ஊக்குவிக்கிறது. அத்துடன், உலகில் ஒரு பல்கலைக்கழகம் வருடா வருடம் தமிழ் மரபையும் பண்பாட்டையும் போற்றி விழா எடுக்கிறது என்றால், அது கனடாவில் உள்ள 96 பல்கலைக்கழகங்களில் முதலிடம் வகிக்கும் டொரண்டோ பல்கலைக்கழகம் மட்டுமே.

இதைத் தொடர்ந்து, தமிழ் இருக்கை அமைக்கும் பணியில் டொரண்டோ பல்கலைக்கழகம் முழு மூச்சுடன் செயல்பட்டு வருகிறது. மேலும், தமிழின் மேன்மையைப் பரப்புவதில் தன் வாழ்நாளின் பெரும்பகுதியைச் செலவிட்ட ஒருவருக்கு டொரண்டோ பல்கலைக்கழகம் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்குவது என்று முடிவு செய்தது. இதற்கான ஒப்பந்தம் ஏற்கெனவே கையெழுத்தாகியுள்ளது.

உலகளாவிய இந்த விருது டொரண்டோ பல்கலைக்கழகத்தின் பாராட்டுச் சான்றிதழ், விருது, பணமுடிப்பு ஆகியவற்றை அடங்கியது. இந்த விருதுக்கு நாவலர் நெடுஞ்செழியன் நினைவாக 'தகைசால் தமிழ் இலக்கிய விருது' எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது. கரோனா பாதிப்பினால் தள்ளிப் போடப்பட்ட இந்த விருது, நிலைமை சீரானதும் உலகம் முழுவதும் உள்ள முக்கியத் தமிழறிஞர்கள் கூடும் மாபெரும் விழாவில் வழங்கப்பட இருக்கிறது.

சமீபத்தில் இலங்கை பேராதனை பல்கலைக்கழகத் தமிழ்த்துறை பேராசிரியர், முனைவர் ஸ்ரீ.பிரசாந்தன் இணையவழி ஒருங்கிணைப்புக் கூட்டத்தில் கலந்துகொண்டு டொரண்டோ பல்கலைக்கலைக்கழகத்தில் அமையவிருக்கும் தமிழ் இருக்கையின் முக்கியத்துவம் குறித்துப் பேசினார்.

அப்போதுபேசிய அவர், "டொரண்டோ பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைய இருக்கும் செய்தி மகிழ்வளிக்கக்கூடியது. உண்மையில் மூன்று லட்சத்துக்கும் அதிகமான இந்திய, இலங்கை, சிங்கை-மலேசியத் தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழும் உலகின் தலைசிறந்த ஜனநாயக நாடுகளில் கனடாவும் ஒன்று. அங்கே மிக உயரிய பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைவது அங்கே வாழும் 3 லட்சம் தமிழர்களுக்கு மட்டுமல்ல; கனடாவுக்கு வெளியே உலகம் முழுவதும் பரவி வாழும் தமிழர்களுக்கும் தமிழைப் பரவச் செய்தற்கும் இது மிக உன்னதமான பணி.

நான் ஒரு தமிழ்ப் பல்கலைக்கழக ஆசிரியராக இருக்கின்ற காரணத்தினால் இதன் உலகளாவிய தன்மையை உணரமுடிகிறது. பாரதி சொல்வதுபோல ஒரு மொழி சர்வதேசமயப்படும்போது இரண்டு விசயங்கள் முக்கியமானவையாகப் படுகின்றன.

ஒன்று, 'சென்றிடுவீர் எட்டுத் திக்கும், கலைச் செல்வங்கள் யாவையும் கொணர்ந்து இங்கே சேர்ப்பீர்' என்று பாரதி சொன்னது. இரண்டு, 'மறைவாக நமக்குள்ளே பழங்கதைகள் சொல்வதில் ஓர் மகிமை இல்லை. திறமான புலமையெனில் வெளிநாட்டோர் அதை வணக்கம் செய்தல் வேண்டும்'.

தமிழ் இருக்கை அமைந்தபிறகான செயல்பாடுகளில் ஒன்று வெளிநாட்டவருக்கு நம் மொழியை அறியக் கொடுப்பது. இப்படியான அங்கீகரிக்கப்பட்ட, எல்லோராலும் ஏற்றுக் கொள்ளத்தக்க வகையிலான நிறுவனமயப்படுத்தப்பட்ட அமைப்புகளால் தமிழ் மொழியைப் பிறமொழி பேசும் தேசிய இனத்தவர் கற்க முன்வருவார்கள். ஒரு மொழியைப் பரவச் செய்வதில் இது முக்கியமானது. அதுமட்டுமல்ல; மேலைநாட்டாருடைய ஆய்வறிவுத் துறையும், எங்களுடைய இலக்கிய அறிவுச் செழுமையும் சங்கமிக்கக் கூடியதாக அமையவிருக்கும் தமிழ் இருக்கைகளை புகழ்பெற்ற வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் நிறுவுவது என்பது மிக உன்னதமான சமுதாயப் பணியாகும்; சர்வதேச அளவிலான அறிவுப் பணியாகும்.

நாங்கள் அந்தக் காலத்தில் கீழைத்தேசவியல் ஆய்வு குறித்த கற்கையில் பிரித்தானியாவில் இருந்தபோது, அங்கு சென்று கற்றுவந்த பேராசிரியர் கணபதி பிள்ளை போன்ற கல்வியாளர்களிடம் இவற்றைப் பார்க்கிறோம். இந்த இரண்டும் சங்கமிக்கின்றபோது கிடைக்கும் ஒரு புதிய புலமைச் சிறப்பு எங்களுக்கு முக்கியமானது. அந்த வகையில் பிறநாட்டார் அறியும்படி எங்கள் இலக்கியச் செல்வங்களைக் கொடுப்பதற்கு உலகப் பல்கலைக்கழகங்களில் தமிழ் பேராசிரியருக்கு இருக்கை அமைவது என்பது மிக அவசியமானது. அதைக் கொண்டே, கொண்டும் கொடுப்பதுமான உறவுக்குத் தளமாக அதைப் பயன்படுத்தமுடியும் என நான் கருதுகிறேன். அந்த வகையில் இந்தப் பணியில் ஈடுபட்டு உழைக்கும் தமிழ் இருக்கை குழுவினருக்கு என் பாராட்டுகள்" எனத் தெரிவித்தார்.

தமிழ் இருக்கை நிதி நிலைமை பற்றி பேசிய எழுத்தாளர் அ.முத்துலிங்கம், இருக்கை அமைய 3 மில்லியன் டாலர்கள் தேவை என்றும், ஏற்கெனவே 1.4 மில்லியன் டாலர்கள் சேகரிக்கப்பட்டுவிட்டது என்றும் கூறினார். மேலும் 1.6 மில்லியன் டாலர்கள் தேவை (ரூ 8.6 கோடி) எனவும், தமிழ்ப் பற்றாளர்களின் ஆதரவோடு மீதியையும் விரைவில் திரட்டிவிடலாம் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.

SCROLL FOR NEXT