புதுச்சேரியில் இன்று புதிதாக 490 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில், மேலும் 2 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 30 ஆயிரத்து 161 ஆகவும், உயிரிழந்தோர் எண்ணிக்கை 551 ஆகவும் உயர்ந்துள்ளது.
இதுகுறித்து, புதுச்சேரி சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் இன்று (அக். 7) கூறும்போது, "புதுச்சேரியில் 5,195 பேருக்குக் கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில், புதுச்சேரி - 355, காரைக்கால் - 65, ஏனாம் - 13, மாஹே - 57 என மொத்தம் 490 பேருக்குத் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மேலும், ரெயின்போ நகரை சேர்ந்த 75 வயது முதியவர், சேதராப்பட்டு சிவசக்தி நகரை சேர்ந்த 75 வயது முதியவர் என 2 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 551 ஆக அதிகரித்துள்ளது. இறப்பு விகிதம் 1.83 சதவீதமாக உள்ளது.
புதுச்சேரி மாநிலத்தில் இதுவரை 30 ஆயிரத்து 161 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுள் புதுச்சேரியில் 2,363 பேர், காரைக்காலில் 505 பேர், ஏனாமில் 61 பேர், மாஹேவில் 115 பேர் என 3,044 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அதேபோல் புதுச்சேரியில் 1,400 பேர், காரைக்காலில் 81 பேர், ஏனாமில் 76 பேர், மாஹேவில் 79 பேர் என 1,636 பேர் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர். இதன் மூலம் தற்போது வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் உட்பட மொத்தமாக 4,680 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
இன்று ஒரே நாளில் 316 பேர் குணமடைந்து மருத்துவமனைகளிலிருந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 24 ஆயிரத்து 930 பேர் (82.66) ஆக அதிகரித்துள்ளது.
இதுவரை 2 லட்சத்து 15 ஆயிரத்து 155 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. இதில் 1 லட்சத்து 81 ஆயிரத்து 563 பரிசோதனைகளுக்கு 'நெகட்டிவ்' என்று முடிவு வந்துள்ளது.
மத்திய அரசு பல்வேறு தளர்வுகளை அறிவித்த பிறகு, புதுச்சேரியை சேர்ந்தவர்கள் வெளி மாநிலத்துக்கு செல்கின்றனர். அதேபோல், வெளி மாநிலத்திலிருந்து புதுச்சேரிக்கு சுற்றுலா பயணிகள் மற்றும் வணிகர்கள் வருகின்றனர். எனவே, ஒருவாரம் அல்லது 10 நாட்களில் மீண்டும் ஆஷா பணியாளர்கள், ஏஎன்எம் செவிலியர்கள் மற்றும் ஒப்பந்த ஊழியர்கள் மூலமாக ஒவ்வொரு பகுதியாக சென்று அறிகுறி உள்ளவர்களை மட்டும் பரிசோதனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்" எனத் தெரிவித்தார்.