கிருஷ்ணகிரி மாவட்டத்தில் திறந்த வெளியில் மலம் கழிப்பதைத் தடுக்க கட்டப்பட்ட பல சுகாதார வளாகங்கள், பயன்பாடின்றி பூட்டிக்கிடக்கிறது. அவற்றை திறக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 333 ஊராட்சிகளிலும் தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்) திட்டத்தின் கீழ் தனிநபர் இல்ல கழிப்பறை, பள்ளிகள் மற்றும் அங்கன்வாடிகளில் கழிவறைகள் கட்டும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், முழு சுகாதார திட்டத்தின் கீழ் 1142 பள்ளிகள் மற்றும் அங்கன்வாடிகளில் ரூ.3 கோடியே 27 லட்சத்து 60 ஆயிரம் மதிப்பில் கழிவறைகள் கட்டபட்டுள்ளது. நிகழாண்டில் 60 ஆயிரத்து 459 தனி நபர் இல்ல கழிப்பறை கட்டும் பணிக்கு அரசு அனுமதி வழங்கி உள்ளது. இதற்காக மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.
இந்நிலையில் மாவட்ட ஊரக வளர்ச்சித்துறை தூய்மை பாரத இயக்கத்தின்(என்பிஏ) திட்டத்தின் கீழ் திறந்த வெளியில் மலம் கழிப்பதைத் தடுக்கும் நோக்கில் பல ஊராட்சிகளில் ரூ.5 கோடி 43 லட்சத்து 70 ஆயிரம் மதிப்பில் 345 ஒருங்கிணைந்த மகளிர் சுகாதார வளாகங்களும், ரூ.ஒரு கோடியே 56 லட்சம் மதிப்பில் 39 ஆண்கள் சுகாதார வளாகங்களும் கட்டப்பட்டுள்ளது.
ஆனால், பல சுகாதார வளாகங்கள் தற்போது வரை பயன்பாட்டிற்கு கொண்டு வராமல் பாழடைந்து வருகிறது. பயன்பாட்டில் உள்ள சுகாதார வளாகங்களில் சில, மின் மோட்டார் பழுது, செப்டிக் டேங்க் நிறைந்தும் சுத்தம் செய்யப்படாத நிலை, மின் விளக்கு வசதி இல்லாத நிலை போன்ற காரணங்களால் மூடப்பட்டுள்ளது.
மேலும், இந்த சுகாதார வளாகத்தைப் புதுப்பித்தல் பணி என்ற பெயரில் ஆண்டுதோறும் பல ஊராட்சிகளில் நிதி ஒதுக்கப்பட்டு செலவிடப்படுவதாகவும் கூறப்படுகிறது. சுகாதார வளாகங்கள் சுகாதாரமற்ற முறையில் காட்சியளிப்பதாகவும், பூட்டிக் கிடக்கும் சுகாதார வளாகங்களை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து மாவட்ட திட்ட இயக்குநர் மந்திராசலத்திடம் கேட்ட போது, “பல்வேறு காரணங்களால் மத்தூர், ஊத்தங்கரை ஒன்றியங்களில் 50-க்கும் மேற்பட்ட சுகாதார வளாகங்கள் தண்ணீர் இல்லாமை, மின்மோட்டார் பழுது உள்ளிட்ட காரணங்களால் பயன்பாட்டில் இல்லாமல் உள்ளது. இதனை சீர் செய்ய அந்தந்த வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஊராட்சி தலைவர்கள் மூலம் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது, என்றார்.