கிருஷ்ணகிரி அணை 3 ஆண்டுகளுக்குப் பின்னர் வேகமாக நிரம்பி வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே பெரியமுத்தூர் கிராமத்தில் கிருஷ்ணகிரி அணை 2 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் 52 அடி உயரத்துக்கு கட்டப்பட்டுள்ளது. அணையில் 8 பிரதான மதகுகளும், 3 மணல் போக்கி சிறிய மதகுகளும், வலது மற்றும் இடதுபுறக் கால்வாய்களும் அமைக்கப்பட்டுள்ளன. இந்த அணையின் மூலம் ஒவ்வொரு ஆண்டும் காவேரிப்பட்டணம், அவதானப்பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் 9012 ஏக்கர் விளைநிலங்களில் இருபோக சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது. கடந்த 63 ஆண்டுகளில் செயல்படுத்தப்பட்ட நீர்ப்பாசனத் திட்டங்களால் பாசன பரப்பளவு 50 ஆயிரம் ஏக்கருக்கு மேல் உயர்ந்துள்ளது.
இந்நிலையில், அணையின் பிரதான முதல் மதகு கடந்த 2017-ம் ஆண்டு நவம்பர் 29-ம் தேதி உடைந்தது. இதனை அகற்றிவிட்டு, கடந்த 2018-ம் ஆண்டு புதிய மதகு பொருத்தப்பட்டது. இதையடுத்து மீதமுள்ள 7 மதகுகளையும் மாற்றி விட்டு, ரூ.19 கோடி மதிப்பில் 7 புதிய மதகுகள் பொருத்தப்பட்டன.
கடந்த 63 ஆண்டுகளில் முதன் முறையாக கடந்த மே மாதம் 1-ம் தேதி முதல் 20-ம் தேதி வரை நீரின்றி அணை வறண்டது. இதனைத் தொடர்ந்து அணையில் தூர்வாரும் பணி மேற்கொள்ளப்பட்டது. ஒரு சில நாட்களில் அணைக்கு நீர்வரத்து அதிகரிக்கத் தொடங்கியது.
தற்போது தென்பெண்ணை ஆற்றின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையால் அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகமாக இருந்து வருகிறது. இதன் மூலம் அணையில் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.
நேற்றைய நிலவரப்படி அணையின் மொத்த உயரமான 52 அடியில் 44 அடி உயரத்திற்கு தண்ணீர் உள்ளது. அணைக்கு விநாடிக்கு 428 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 114 கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. 3 ஆண்டுகளுக்குப் பின்னர் அணை வேகமாக நிரம்பி வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
இதுதொடர்பாக தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் ராமகவுண்டர் கூறும் போது, ‘‘அணையின் மொத்த உயரமான 52 அடியில் 14 அடிக்கு சேறு நிரம்பி உள்ளது. நிகழாண்டில் அணையை தூர்வார வாய்ப்பு இருந்தும், தாமதமாக பணிகள் மேற்கொண்டதால் முழுமை பெறவில்லை. முதல்போக சாகுபடிக்கும், ஏரிகளுக்கும் தண்ணீர் சென்று கொண்டிருக்கிறது. நெல் வயல்களில் கதிர் வெளிவரும் தருவாயில் உள்ளது. இன்னும் ஒரு மாதத்தில் நெல் அறுவடை முடிந்துவிடும். எனவே, ஏரிகளில் நிலத்தடி நீர்மட்டம் உயர தண்ணீர் தொடர்ந்து திறந்துவிட வேண்டும்,’’ என்றார்.