திண்டுக்கல் அருகே ஓடையில் வீசப்பட்ட 10 நாட்டுத் துப்பாக்கிகள் மீட்கப்பட்டன.
திண்டுக்கல் மாவட்டத்தில் சமீப காலமாக அனுமதியின்றி நாட்டுத் துப்பாக்கிகளைத் தயாரித்து பயன்படுத்துவது அதிகரித்து வருகிறது. இந்நிலையில் போலீஸார் விடுத்த எச்சரிக்கையைத் தொடர்ந்து நாட்டுத் துப்பாக்கிகளை பயன்படுத்தி வந்த பலர் அவற்றை கண்மாய், குளங்களில் வீசிச் செல்கின்றனர்.
இதற்கிடையே, திண்டுக்கல் சிறுமலை அடிவாரம் பகுதியில் நாட்டுத் துப்பாக்கியுடன் ஒருவர் பிடிபட்டார். அவரை விசாரித்ததில், ரெட்டியபட்டி பகுதியில் நாட்டுத்துப்பாக்கி தயாரித்து விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து நால்வரை போலீஸார் சமீபத்தில் கைது செய்தனர்.
இதையடுத்து திண்டுக்கல் மாவட்டத்தில் அனுமதியின்றி நாட்டுத் துப்பாக்கி வைத்திருப்பவர்கள் தாமாக முன்வந்து ஒப்படைக்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டது. இதைத் தொடர்ந்து, தவசிமடை ஓடைப் பகுதியில் கடந்தசெப்.17-ம் தேதி 14 நாட்டுத் துப்பாக்கிகள் கண்டெடுக்கப்பட்டன. அவற்றை போலீஸார் கைப்பற்றினர். நேற்று தவசிமடை கிராமம் நாகம்மாள் கோயில்அருகேயுள்ள ஓடைப்பகுதியில் மேலும் 10 துப்பாக்கிகள் கண்டெடுக்கப்பட்டன. இதுதொடர்பாக சாணார்பட்டி போலீஸார் விசாரிக்கின்றனர்.