திருவள்ளூர் அருகே தலக்காஞ்சேரி பகுதியில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கிருஷ்ணா இணைப்புக் கால்வாயில் தூர்வாரும் பணி நடைபெற்று வருகிறது. 
தமிழகம்

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை: கிருஷ்ணா கால்வாய் தூர்வாரும் பணி தீவிரம்

செய்திப்பிரிவு

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கிருஷ்ணா கால்வாய் மற்றும் அதன் இணைப்பு, ஊத்துக்கால்வாய்கள் தூர்வாரும் பணி தீவிரமாக நடைபெறுகிறது.

சென்னை குடிநீர் தேவைக்காக தெலுங்கு-கங்கை ஒப்பந்தப்படி ஆண்டுதோறும் இரு தவணைகளாக ஆந்திர அரசு கிருஷ்ணா நீர் வழங்கி வருகிறது. அந்த நீர், கண்டலேறு அணையில் இருந்து திறக்கப்பட்டு, 177 கி.மீ நீளத்துக்கு அமைக்கப்பட்டுள்ள கிருஷ்ணா கால்வாய் மூலம் பூண்டி ஏரிக்கு வரும். அவ்வாறு பூண்டி ஏரிக்கு வரும் கிருஷ்ணா நீர், அங்கிருந்து, இணைப்பு, ஊத்துக்கால்வாய் மூலம் புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு அனுப்பப்படும்.

தற்போது, நடப்பு ஆண்டுக்கான முதல் தவணை கிருஷ்ணா நீர்,கண்டலேறு அணையில் இருந்து,பூண்டி ஏரிக்கு வந்து கொண்டிருக்கிறது.

இந்நிலையில், வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, பொதுப்பணித் துறையின் கிருஷ்ணா குடிநீர் வழங்கும் திட்டம் சார்பில், கிருஷ்ணா கால்வாய் மற்றும் இணைப்பு, ஊத்துக் கால்வாய்கள் தூர்வாரும் பணி தற்போது தீவிரமாக நடைபெறுகிறது.

இதுகுறித்து, பொதுப்பணித் துறை அதிகாரிகள் தெரிவித்ததாவது: வடகிழக்கு பருவமழைமுன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, கண்டலேறு அணையில் இருந்து திறக்கப்பட்டுவரும் கிருஷ்ணா நீர் மற்றும் மழைநீர் பூண்டி, புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு தடையின்றி செல்லவசதியாக கிருஷ்ணா கால்வாய் மற்றும் அதன் இணைப்பு, ஊத்துக்கால்வாய்கள் தூர்வாரும் பணி ரூ.38 லட்சம் மதிப்பீட்டில் தற்போது தீவிரமாக நடைபெறுகிறது.

இப்பணி தாமரைக்குப்பம் ஜீரோ பாயின்ட் முதல் பூண்டி வரை 25 கி.மீ நீளம் உள்ள கிருஷ்ணா கால்வாய், பூண்டி ஏரி முதல் சிறுகடல் வரை 10 கி.மீ நீளமுள்ள இணைப்புக் கால்வாய், சிறுகடல் முதல் செம்பரம்பாக்கம் ஏரி வரைஉள்ள 15 கி.மீ நீளமுள்ள இணைப்புக் கால்வாய், சிறுகடல் முதல், புழல் ஏரிவரை உள்ள 21.5 கி.மீ நீளமுள்ள ஊத்துக்கால்வாய்களில், சரிந்துள்ள மண்ணை பொக்லைன் இயந்திரம் மூலம் அகற்றுதல், கரைகளில் உள்ள முட்களை அகற்றுதல் என, தூர்வாரும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இப்பணி இன்னும் சில நாட்களில் முடிவுறும் என்றனர்.

SCROLL FOR NEXT