தமிழகம்

தமிழகத்தில் அரசுப் பணிகளில் பிற மாநிலத்தவர்களை நியமிப்பது ஏன்?- உயர் நீதிமன்றம் கேள்வி

கி.மகாராஜன்

பிற மாநிலங்களில் அந்த மாநிலங்களைச் சேர்ந்தவர்களுக்கு மட்டும் பணி வழங்கும் நிலையில், தமிழகத்தில் மட்டும் பிற மாநிலத்தவர்கள் அதிகளவில் அரசு பணிகளில் நியமிப்பது ஏன்? என உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

ஊட்டி ஆயுத தொழிற்சாலையில் 140 கெமிக்கல் பிராசசிங் ஒர்க்கர் பணியிடங்களை நிரப்ப 2015-ல் அறிவிப்பாணை வெளியிடப்பட்டது.

இப்பணிக்கான எழுத்துத்தேர்வில் ஒட்டப்பிடாரத்தை சேர்ந்த சரவணன் 40 மதிப்பெண் பெற்றார். இவரை விட குறைவாக மதிப்பெண் பெற்ற 6 பேருக்கு பணி நியமன உத்தரவு வழங்கப்பட்டது. அந்த 6 பேரின் பணி நியமனத்தை ரத்து செய்யவும், தனக்கு பணி வழங்கக்கோரியும் சரவணன் உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தார். அவருக்கு பணி வழங்க தனி நீதிபதி உத்தரவிட்டார்.

இதை ரத்து செய்யக்கோரி ஆயுத தொழிற்சாலை சார்பில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள், பிற மாநிலங்களில் அந்த மாநிலங்களை சேர்ந்தவர்கள் மட்டுமே பணி நியமனம் செய்யப்படுகின்றனர். ஆனால் தமிழகத்தில் மட்டும் பிற மாநிலங்களை சேர்ந்தவர்கள் அதிகளவில் பணி நியமனம் செய்யப்படுகின்றனர். இதற்கு தமிழக அரசு பொறுப்பேற்க வேண்டும்.

வட மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் அவர்களின் தாய்மொழியான ஹிந்தியில் தேர்ச்சி பெற இயலாத நிலையில், தமிழ் மொழியில் அதிக மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்று பணி நியமனம் பெறுவது எப்படி? பணித் தேர்வுகள் நேர்மையாகவும், வெளிப்படையாகவும் நடைபெற வேண்டும் என்றனர்.

பின்னர், ஆயுதச் தொழிற்சாலை பணிக்கான எழுத்துத்தேர்வின் விடைத்தாள்கள் 3 நாளில் அழிக்கப்பட்டது ஏன்? பணி நியமனம் எந்த அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டது என்பது தொடர்பாக ஆயுத தொழிற்சாலை பொது மேலாளர் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை அக். 13-க்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

SCROLL FOR NEXT