கேரளாவில் பிற மாநிலங்களிலிருந்து கழிவுகள் கொண்டுவருவதை போலீஸாரும், அதிகாரிகளும் தடுப்பது போல் தமிழக போலீஸாரும், அதிகாரிகளும் செயல்படுவதில்லை என உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
திருச்சி வையம்பட்டியைச் சேர்ந்த மணிவேல், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு:
வையம்பட்டி கரடுகுளம் கண்மாயில் மருத்துவக் கழிவுகள் கொட்டப்படுகின்றன. இதனால் கண்மாய் நீர் மாசுபட்டு வருவதுடன் நிலத்தடி நீர் மட்டமும் கெட்டு வருகிறது. உடல் நலனுக்கும் பாதிப்பு ஏற்படுகிறது. எனவே கண்மாயில் மருத்துவ கழிவுகளை கொட்டுவதை தடுக்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், கேரளா எல்லைக்குள் எந்த கழிவு பொருட்களும் மாநிலத்துக்குள் நுழையவிடாதபடி அம்மாநில போலீஸாரும், அதிகாரிகளும் செயல்படுகின்றனர். அங்கிருந்து மருத்துவ கழிவுகளை தமிழகத்துக்குள் கொண்டு வந்து கொட்டுகின்றனர்.
இதை தடுப்பதில் போலீஸாரும், அதிகாரிகளும் அக்கறையில்லாமல் உள்ளனர் என்றனர்.
மேலும், கண்மாய்க்குள் மருத்துவ கழிவுகளை கொட்டுவதால் தண்ணீரில் கழிவுகள் கலந்து மக்கள் நலன் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது எனவே, கண்மாயில் உள்ள மருத்துவக் கழிவுகளை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வெளி மாநிலங்களிலிருந்து கழிவுகள் கொட்டப்பட்டால், சம்பந்தப்பட்ட சோதனைசாவடியில் பணியிலிருப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். வெளிமாநிலங்களில் இருந்து மருத்துவக் கழிவுகள் தமிழகத்தில் கொட்டுவதை தடுக்க விதிகள் மற்றும் வழிகாட்டுதல்கள் உள்ளதா? என்பது தொடர்பாக மாநில சுகாதாரத்துறை செயலர் பதிலளிக்கவும், மனு தொடர்பாக திருச்சி மாவட்ட ஆட்சியர் பதிலளிக்கவும் உத்தரவிட்டு, அடுத்த விசாரணையை நவ. 3-க்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.