பாளையங்கோட்டையில் தசரா திருவிழாவுக்காக அம்மன் கோயில்களில் கால்நாட்டு வைபவம் நடைபெற்றது. வரும் 26-ம் தேதி சமூக இடைவெளியை கடைபிடித்து அம்மன் சப்பர பவனியை நடத்த விழா குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.
மைசூர் தசரா திருவிழாவுக்கு ஈடாக பாளையங்கோட்டையில் தசரா திருவிழா கடந்த 100 ஆண்டுகளுக்கு மேலாக நடத்தப்பட்டு வருகிறது. இங்குள்ள 11 அம்மன் திருக்கோயில்களில் இருந்து ரிஷப வாகன சப்பரங்களில் அம்மன் எழுந்தருளி ஷ்ரி ஆயிரத்தம்மன் தலைமையில் ஒருங்கிணைந்து ஆண்டுதோறும் தசரா திருவிழா கொண்டாடப்படுகிறது.
இதற்காக மகாளய அமாவாசையன்று கொடி ஏற்றி 9 நாட்கள் நவராத்திரி உற்சவங்கள் நடைபெறும். அதற்கு ஒரு மாதத்துக்குமுன் மகாளய அமாவாசைக்கு முந்தைய அமாவாசையன்று கால்நாட்டு விழாவும் நடத்தப்படும்.
இவ்வாண்டு கரோனா பரவல் காரணமாக கால்நாட்டு விழா மற்றும் தசரா திருவிழாக்களுக்கு இந்துசமய அறநிலையத்துறை அனுமதி அளிக்காமல் இருந்தது.
இதையடுத்து தசரா விழா குழுவினர் விழாவுக்கு அனுமதி கேட்டு மாவட்ட ஆட்சியர் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளிடம் மனுக்களை அளித்து வந்தனர். இதையடுத்து அரசு விதிமுறைகளின்படி விழாவுக்கு அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது.
இதையடுத்து பாளையங்கோட்டை ஆயிரத்தம்மன் கோயில், முப்பிடாதியம்மன் வடக்கு மற்றும் தெற்கு முத்தாரம்மன், வடக்கு, தெற்கு, கிழக்கு உச்சிமாகாளியம்மன், புதுஉலகம்மன், தேவிஷ்ரி உலகம்மன், விஸ்வகர்ம உச்சிமாகாளியம்மன் உள்ளிட்ட 11 அம்மன் கோயில்களிலும் கால்நாட்டு விழா மேளதாளம் முழங்க இன்று நடைபெற்றது.
இதில் பக்தர்கள் சமூக இடைவெளியுடன் பங்கேற்றனர். விழாவில் வரும் 16-ம் தேதியன்று 1-ம் திருவிழாவன்று தீர்த்தம் எடுத்தல், கொடியேற்றம், அம்மன் அபிஷேகம், சிறப்பு பூஜைகள் நடத்தப்படுகின்றன. வரும் 26-ம் தேதி 11 அம்மன் சப்பரங்களும் ஆயிரத்தம்மன் கோயிலுக்கு வந்து, அங்கிருந்து நேராக எருமைகிடா மைதானத்தில் திருவிழா நிகழ்ச்சிகள் நடக்கின்றன.
தசரா சப்பர பவனியின்போது தெருக்களில் ஊர்வலம், பக்தர்கள் தேங்காய் உடைத்தல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறாது. வரும் 27-ம் தேதி தீர்த்தவாரி நடைபெறுகிறது. விழாவில் பங்கேற்கும் பக்தர்கள் கரோனா கட்டுப்பாடுகளை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என்று விழா குழுவினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.