கன்னியாகுமரி அருகே அலையாத்தி காடுகளை அழித்து சூழலியல் பூங்கா அமைக்கப்படுகிறதா? என்று ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய குழு அமைத்து தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
கன்னியாகுமரி அருகே உள்ளகீழமணக்குடி கடற்கரை கிராமத்தில் ரூ.10 கோடியில் சூழியல் பூங்காஅமைக்கப்பட்டு வருகிறது. இப்பூங்காவுக்காக இயற்கை அழகுடன் விளங்கும் அலையாத்திக் காடுகள் அழிக்கப்பட்டிருப்பதாக சூழலியல் ஆர்வலர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். இந்நிலையில் ‘அலையாத்திக் காடுகளை அழித்து சூழலியல் பூங்கா அமைப்பதா? - சூழலியல் ஆர்வலர்கள் வேதனை"என்ற தலைப்பிலான செய்தி கடந்தசெப்டம்பர் மாதம் 7-ம் தேதி 'இந்து தமிழ் திசை' இணையதளத்தில் வெளியாகி இருந்தது.
அதை தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தென்மண்டல அமர்வு தாமாக முன்வந்து வழக்காக பதிவு செய்து விசாரணைக்கு எடுத்துக்கொண்டது. இந்த வழக்கு அமர்வின் நீதித்துறை உறுப்பினர் கே.ராமகிருஷ்ணன், தொழில்நுட்ப உறுப்பினர் சாய்பால் தாஸ்குப்தா ஆகியோர் முன்னிலையில் கடந்தவாரம் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பு வழக்கறிஞர் ஆஜராகி, “உரிய ஆய்வு மேற்கொண்டு, மாவட்ட ஆட்சியர் தலைமையில் அமைக்கப்பட்ட குழு மூலமாகவே சூழலியல் பூங்கா அமைக்கப்பட்டு வருகிறது” என்றார்.
இதைத்தொடர்ந்து அமர்வின் உறுப்பினர்கள் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:
அலையாத்தி காடுகள் சுனாமி போன்ற இயற்கை பேரிடர் காலங்களில், அதன் தாக்கத்தை மட்டுப்படுத்தும் பாதுகாப்பு அரணாக அமைந்துள்ளது. எனவே இந்தசூழலியல் பூங்கா, அலையாத்தி காடுகளை அழித்து அமைக்கப்படுகிறதா என ஆய்வு செய்ய, மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் சென்னை மண்டல மூத்த அதிகாரி, தேசிய கடல்சார் தொழில்நுட்ப நிறுவன மூத்த விஞ்ஞானி, மாவட்ட ஆட்சியர் அல்லது அவரால் நியமிக்கப்பட்ட அதிகாரி, மாவட்ட வன அதிகாரி, மீன்வளத்துறை அதிகாரி ஆகியோர் கொண்ட குழு அமைக்கப்படுகிறது.
இந்தக் குழு, பணிகள் தொடங்குவதற்கு முந்தைய நிலை, தற்போதுள்ள நிலை குறித்து செயற்கைக்கோள் படங்கள் மூலமாக ஆய்வு செய்ய வேண்டும். இத்திட்டத்தால் அலையாத்தி காடுகளுக்கு பாதிப்பு ஏதேனும் இருந்தால், அதற்கு பொறுப்பான நபர் அல்லதுதுறை, இழப்பீடாக வசூலிக்க வேண்டிய தொகை குறித்து நிர்ணயிக்க வேண்டும். இத்தகைய விவரங்கள் அடங்கிய ஆய்வு அறிக்கையை, இந்த வழக்கின் அடுத்த விசாரணை நாளான நவம்பர் 17-ம் தேதிக்கு முன்பாக அமர்வில் தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.