திருநெல்வேலி மாநகராட்சியில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களைப் பயன்படுத்தியதாக கடந்த மாதத்தில் மட்டும் ரூ.1.19 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி ஆணையர் கண்ணன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
திருநெல்வேலி மாநகராட்சி பகுதியில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துதைத் தடுக்கவும், அவற்றை தினசரி கண்காணிக்கும் விதமாக மாநகராட்சி பணியாளர்களால் உருவாக்கப்பட்ட கண்காணிப்புக்குழு ஆய்வுப்பணி மேற்கொண்டு வருகிறது.
இந்த ஆய்வின்போது பிளாஸ்டிக் பொருட்கள் கைப்பற்றப்படுவதுடன் உபயோகிப்பாளர் மற்றும் விற்பனை செய்பவர்களுக்கு அபராத தொகையும் விதிக்கப்பட்டு கடைகளை பூட்டி சீல் வைக்கும் நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதன்படி கடந்த செப்டம்பர் மாதத்தில் மட்டும் 4 மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளில் மட்டும் 920 சிறு மற்றும் குறு நிறுவனங்களில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவது கண்டறியப்பட்டு, 269 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டிருந்தது. ரூ.1.19 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
இப்பணியினை தீவிரப்படுத்தும் பொருட்டு சிறப்பு கண்காணிப்பு குழுக்கள் கண்டறியும் நிறுவனங்கள் மீது மேல்நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.