காரைக்காலில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினர். 
தமிழகம்

உ.பி. வன்கொடுமைக்குக் கண்டனம்: காரைக்காலில் காங்கிரஸ் கட்சியினர் உண்ணாவிரதம்

வீ.தமிழன்பன்

உத்தரப் பிரதேச வன்கொடுமை நிகழ்வைக் கண்டித்து காரைக்காலில் காங்கிரஸ் கட்சியினர் இன்று (அக்.6) உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

காரைக்கால் மதகடி பகுதியில் நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்துக்கு புதுச்சேரி கல்வி மற்றும் வேளாண்துறை அமைச்சரும், மாநில காங்கிரஸ் துணைத் தலைவருமான ஆர்.கமலக்கண்ணன் தலைமை வகித்தார்.

உத்தரப் பிரதேசத்தில் பாலியல் வன்கொடுமையால் பெண் உயிரிழந்த சம்பவத்துக்கும், அப்பெண்ணின் குடும்பத்தாரைச் சந்திக்கச் சென்ற காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தியை அம்மாநில போலீஸார் நடத்திய விதத்துக்கும் கண்டனம் தெரிவித்து இந்த உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்பட்டது.

போராட்டத்தின் இடையே அமைச்சர் ஆர்.கமலக்கண்ணன் செய்தியாளர்களிடம் கூறும்போது, ''மத்திய அரசு பெண்களுக்கு எதிரான, குறிப்பாக தலித் பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுப்பதில் தோல்வியடைந்துள்ளது. இச்சம்பவம் குறித்து பிரதமர் கருத்துத் தெரிவிக்காததைக் கண்டித்தும், பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தைச் சந்திக்கச் சென்ற ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் மீது காவல்துறையை ஏவிவிட்ட நடவடிக்கையைக் கண்டித்தும் இப்போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.

மத்திய பாஜக அரசின் இத்தகைய நடவடிக்கைகளைக் கண்டித்து இதுபோன்ற போராட்டங்கள் காங்கிரஸ் கட்சி சார்பாகவும், ஒத்த கருத்துடைய கட்சிகள் சார்பாகவும் தொடர்ந்து நடத்தப்படும்'' என்றார்.

போராட்டத்தில் மாவட்ட காங்கிரஸ் தலைவர் பாஸ்கரன் உள்ளிட்ட கட்சியினர் திரளானோர் கலந்து கொண்டனர்.

SCROLL FOR NEXT