திருப்பூர் மாவட்டம் அவிநாசியை சேர்ந்தவர் ஏ.சிவக்குமார் (44). இவரை, முன்விரோதம் காரணமாக கடந்த மாதம் 14-ம் தேதி இரவு பல்லடம் அருள்புரம் அருகே பாச்சாங்காட்டுபாளையம் குட்டை பகுதியில், மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தை சேர்ந்த பெண்கள் இருவர் மிளகாய் பொடி தூவி, தாக்கி கட்டி போட்டிருந்தனர். சம்பவ இடத்துக்கு பல்லடம் காவல் துறையினர் சென்று, 3 பேரையும் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரித்தனர்.
இருதரப்பு புகாரின்பேரில் தனித் தனியாக வழக்குகளை பதிவு செய்த காவல் துறையினர், பேரையும் கைது செய்தனர். தற்போது, அவர்கள் நிபந்தனை ஜாமீனில் உள்ளனர்.
காவல் துறையினர் தொடர்ந்து மேற்கொண்ட விசாரணையில், சிவக்குமார் தாக்கப்பட்ட விவகாரத்தில் கோவை சூலூரை சேர்ந்த ஆர்.ஜெயப்பிரகாஷ் (27), எஸ்.மகேஷ்குமார் (28) ஆகிய இருவர், மேற்குறிப்பிட்ட பெண்களுக்கு உதவியாக இருந்தது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, நேற்று அவர்கள் கைது செய்யப்பட்டனர்.
மாவட்ட காவல் துறை அதிகாரிகள் கூறும்போது, "கைது செய்யப்பட்ட 4 பேரும், கடந்த 14-ம் தேதி பல்லடத்தில் விடுதி ஒன்றில் தங்கி திட்டமிட்டு இந்த செயலில் ஈடுபட்டுள்ளனர். பல உண்மைகளை புகார் அளித்த பெண் மறைத்துள்ளார்.
பெண்களின் பாதுகாப்புக்கு காவல் துறையினர் எதிரானவர்கள் என்பதுபோல சித்தரித்துள்ளார். வழக்கு விசாரணையில் அறிவியல் ரீதியாக ஆதாரங்கள் திரட்டப்பட்டுள்ளன. கண்காணிப்பு கேமரா பதிவுகள், அலைபேசி அழைப்பு விவரங்கள், போலி திருமண பதிவு ஆவணம் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டுள்ளன. தொடர்ந்து விசாரிக்கப்பட்டு வருகிறது" என்றனர்.