வானூரை எடுத்த பூத்துறை ஊராட்சிக்குட்பட்டது ‘ஊசுட்டேரி’. இந்த ஏரி இயற்கையாய் அமைந்தது அல்ல. சோழ மன்னன் கோப்பெருஞ்சிங்கன் இந்த ஏரிக்கு மதகுகளும், கால்வாய்களும் கட்டினான் என்று திருவக்கரைக் கோயில் கல்வெட்டுகள் சொல் கிறது.
புதுச்சேரி முத்தரையர் பாளையத்தில் நீர் ஆதாரத்தைக் கண்டுபிடிக்க உதவிய ஆயி என்ற தேவதாசி பெண் நினைவாக புதுச்சேரியில் ஆயி மண்டபம் என்ற நினைவுச் சின்னம் கட்டப்பட்டுள்ளது.
ஆயியின் தங்கை ஒல்லியாக இருந்ததால் ‘ஊசி’ என்று அழைக்கப்பட்டாள். அவள், பாழடைந்த நிலையில் இருந்த இந்த ஏரியை தன்னுடைய பொருளுதவியால் சீர் செய்ய முயற்சி மேற்கொண்டாள். அவள் ஊசி போல இருந்ததால் . அவளின் நினைவாக ‘ஊசியிட்ட ஏரி’ அழைக்கப்பட்டு பின்னர் ‘ஊசுட்டேரி’ என மருவியது என்பது செவிவழிச் செய்தி.
புதுச்சேரியில் இருந்து மேற்கே 12 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது இந்த ஏரி. 800 ஹெக்டேர் பரப்பளவு கொண்ட இந்த ஏரியின் அருகே ஊசுடு, கூடப்பாக்கம், மேற்கில் ராமநாதபுரம், தொண்டமாநத்தம், துத்திப்பட்டு, கரசூர், சேதராப்பட்டு. தமிழக கிராமங்களான விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த வானூர்வட்டத்திற்குட்பட்ட பூத்துறை,காசிப்பாளையம். மணவெளி, கடப்பேரிக்குப்பம், கொண்டிமேடு, நடுப்பாளையம், வாழப்பட்டாம் பாளையம், பெரம்பை ஆகிய பகுதிகள் உள்ளன.
இந்த ஊசுட்டேரியில் தாவர வியல் ஆய்வின்படி 60 வகை குடும்பங்களைச் சேர்ந்த 200 வகை செடி, கொடி, மரங்கள் உள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் முதல் மார்ச் மாதம் வரை ரஷ்யா, இலங்கை, மியான்மர், வங்கதேசம், பாகிஸ் தான்,ஆஸ்திரேலியா, சைபீரியா உள்ளிட்ட நாடுகளிலிருந்து பிக்மி கூஸ் (Pygmy goose), பார் ஹெட்டட் கூஸ், காட்டன் பிக்மி கூஸ் உள்ளிட்ட பல்வேறு வகையான பறவைகள் வருகின்றன.
கொக்கு, நாரை, மடையான், நீர்க்கோழி, சிரவி, பூநாரை, வக்கா, அரிவாள் மூக்கன், செங்கால் நாரை, கூழைக்கடா, குருட்டுக்கொக்கு, வெண்கொக்கு, சாம்பல் நிறக் கூழைக்கடா, ஊசிவால் வாத்து, மஞ்சள்மூக்கு நாரை, பாம்புதாரா, நாமக்கினி பறவைகள் என 47 குடும்பங்களைச் சேர்ந்த 66 பறவை இனங்கள் இங்கு வருவது கண்டறியப்பட்டுள்ளது.
சர்வதேச இயற்கை பாதுகாப்புக் கழகத்தால் (IUCN-International Union for Conservation of Nature) ஆசியாவின் முதன்மையான 93 நீர்நிலைகளுள் ஊசுட்டேரி ஒன்று என்று அறிவித்துள்ளது.
உலக சதுப்புநில அமைப்பு (Wetland International) ஊசுட்டேரியும் அதைச் சுற்றியுள்ளஈரநிலப் பகுதிகளும், ஆசியாவில் முதன்மையானவை என்றும், பம்பாய் இயற்கை வரலாற்று கழகம் தென்னிந்தியாவின் முதன்மை யான பறவை தங்குமிடம் என்றும் அறிவித்துள்ளன.
ஊசுட்டேரியின் மொத்த பரப்பளவான 800 ஹெக்டேரில் 410 ஹெக்டேர் விழுப்புரம் மாவட்ட வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த ஊசுட்டேரி தற்போது புதர் மண்டிக் கிடக்கிறது.
இந்த ஏரியை சீரமைக்க ரூ.2 கோடி மதிப்பீட்டிலான பணிகள் விழுப்புரம் மாவட்ட வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் மேற்கொள்ளப்பட உள்ளது.
இதை சரி செய்வது குறித்து, விழுப்புரம் மாவட்ட வன அலுவலர் அபிஷேக் தோமரிடம் கேட்டபோது, “இந்த ஏரியை பறவைகள் சரணாலயமாக அமைக்க அடிப்படை மற்றும் உள் கட்டமைப்பு வசதிகள் செய்யப்பட்டு வருகிறது.
500 மீட்டர் நீளத்திற்கு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளன. சுற்றுலா பயணிகள் அறியும் வண்ணம் பலநாடுகளில் இருந்து வரும் பறவைகள், அவை வரும் வழித்தடங்கள் வரைபடங்களாக காட்சிக்கு வைக்கப்பட உள்ளது. மேலும் 5 பேர் கொண்ட வேட்டை தடுப்பு கண்காணிப்புக்குழு அமைக்கப்பட்டுள்ளது. முதற்கட்ட மாக இந்த ஏரியை பறவைகள் சரணாலயமாக மாற்ற ரூ.2 கோடிக்குதிட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த நிதியை மத்திய அரசு 60 சதவீதமும், மாநில அரசு 40 சதவீதமும் பகிர்ந்து அளிக்கும். இங்கு வரும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளை அழைத்து செல்ல வழிகாட்டும் குழுவும் அமைக்கப்பட்டுள்ளது” என்றார்.
தமிழகப் பகுதிக்குட்பட்ட ஏரிப் பகுதியில் சீரமைப்பு பணிகள் நடந்தாலும், தமிழக அரசும், புதுச்சேரி அரசும் கைகோர்த்து இப்பணிகளை முழுமையாக மேற்கொள்ளும் போதுதான் பணிகள் முழுமையடையும்.