தமிழகம்

மணக்குள விநாயகர் கோயில் யானை லட்சுமியின் நிலை என்ன? - பராமரிப்பு தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

செய்திப்பிரிவு

புதுச்சேரி மணக்குள விநாயகர் கோயில் யானை லட்சுமி பராமரிப்பு தொடர்பான அறிக்கையை தாக்கல் செய்ய புதுச்சேரி அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

புதுச்சேரியில் பிரசித்தி பெற்றமணக்குள விநாயகர் கோயில்யானை லட்சுமி நோய்வாய்பட்டுள் ளதாக விலங்குகள் நல அமைப்பு அளித்த புகாரின் அடிப்படையில் புதுச்சேரி காமராஜர் வேளாண் அறிவியல் நிலைய வளாக பண்ணையில் வைத்து பராமரிக்கப் பட்டது. இந்நிலையில் முதல்வர்நாராயணசாமி உத்தரவுப்படி யானை லட்சுமி மீண்டும் கோயிலுக்கு கொண்டு வரப்பட்டது. முதல்வரின் இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி, பீட்டாஅமைப்பின் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதில் நோய்வாய்ப்பட்டுள்ள யானை லட்சுமியை சரணாலயத்துக்கோ அல்லது மறுவாழ்வு முகாமுக்கோ அனுப்பாமல் மீண்டும் கோயில் வளாகத்துக்கு கொண்டு வந்திருப்பது ஏற்புடையதல்ல என கோரப்பட்டது.

இந்த வழக்கு விசாரணை நேற்று நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், ஆர்.ஹேமலதா ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது மணக்குள விநாயகர் கோயில் யானை லட்சுமி தற்போது பூரண உடல் நலத்துடன் இருப்பதாகவும், கோயில் அமைந்துள்ள இடத்திலிருந்து சுமார் 2 கி.மீ தொலைவில் உள்ள இயற்கை சூழ்ந்த பகுதிக்கு நாள்தோறும் 2 முறை அழைத்து செல்லப்படுவதாகவும் புதுச்சேரி அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அதையடுத்து நீதிபதிகள், யானை லட்சுமியின் பராமரிப்பு குறித்து வரும் நவ.6-க்குள் புதுச்சேரி அரசு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்துள்ளனர்.

SCROLL FOR NEXT