10-ம் வகுப்பு மாணவர்களுக்காக ஆசிரியை ஹேமலதா உருவாக்கிய ‘பென் டிரைவ்’ வடிவ தமிழ் பாட முறையை விழுப்புரம் மாதிரி பள்ளி மாணவிகளுக்கு நேற்று மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முனுசாமி வழங்கினார். 
தமிழகம்

10ம் வகுப்பு மாணவர்களுக்கான தமிழ் பாடங்களை ‘பென் டிரைவ்’வில் பதிவு செய்து இலவசமாக வழங்கும் ஆசிரியை

செய்திப்பிரிவு

விழுப்புரம் மாவட்டம் செ.குன்னத் தூர் அரசு உயர்நிலைப்பள்ளி தமிழ் ஆசிரியை ந.கி.ஹேமலதா 10ம் வகுப்பு மாணவர்களுக்கான தமிழ் பாடங்களை இலவசமாக ‘பென் டிரைவ்’ மூலம் பதிவு செய்து வழங்கியுள்ளார்.

இந்த நிகழ்ச்சி நேற்று விழுப்புரம் மாதிரி மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முனுசாமி பங்கேற்று மாணவ, மாணவியருக்கு அந்த இலவச ‘பென் டிரைவ்’களை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட கல்வி அலுவலர்துரைப்பாண்டியன், செ.குன்னத்தூர் அரசு உயர்நிலைப்பள்ளி ஆசிரியை ந.கி ஹேமலதா, விழுப்புரம் மாதிரி மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை சசிகலா ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதுதொடர்பாக ஆசிரியை ந.கி.ஹேமலதாவிடம் கேட்ட போது, “என் வகுப்பில் 28 மாணவர்கள் உள்ளனர். தற்போது பள்ளிகள் திறக்கப்படாமல் இருப்பதால் வருகின்ற 10ம் வகுப்பு பொது தேர்வை எதிர் கொள்ள உள்ள மாணவர்களுக்காக செய்யுள் 26, இலக்கணம் 9, உரைநடை 9, துணைப்பாடங்கள் 9, பொதுக்கட்டுரை 6 என 59 பாடங்களை ‘பென் டிரைவில்’ பதிவு செய்து, இலவசமாக வழங்க முடிவெடுத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மூலம் வழங்கினேன்.

சுமார் 6 மணி நேரம் இப்பாடங் களை இதில் பதிவு செய்துள்ளேன். ரூ.300 மதிப்புள்ள ‘பென் டிரைவ்’ மூலம் காப்பி செய்து இலவசமாக வழங்கப்பட்டது. மேலும் மாணவர்கள் தங்களின் வீட்டுப்பாடத்தை எழுதி போட்டோ எடுத்து வாட்ஸ் ஆப் மூலம் அனுப்பினால் திருத்தி, அனுப்பவும் தயாராக உள்ளேன். ஏழை, எளிய மாணவிகள் 99444 46172 என்ற கைபேசி எண்ணுக்குத் தொடர்பு கொண்டால் தமிழ் பாடங்கள் தொடர்பான இந்த ‘பென் ட்ரைவ்’வை இலவசமாக தரத் தயாராக உள்ளேன்’’ என்றார்.

ஆசிரியை ஹேமலதா, 10-ம்வகுப்பு மாணவர்களுக்காக உருவாகியுள்ள தமிழ் பாடங்கள் விழுப்புரம் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியின் யூ டியூப்சானலிலும் பதிவேற்றப்பட்டுள்ளது. மாணவர்கள் அதைக் கண்டு பயன்பெறலாம்.

ஆசிரியை ஹேமலதா, கடந்த 2003-04 கல்வியாண்டில் கற்றல் கற்பித்தல் உபகரணங்களுக்கான விருது, 2018-19ம் ஆண்டில் கற்பிப்பதில் புதுமை ஆசிரியர் விருதும் பெற்றுள்ளார்.

மேலும் மூத்தோர் தடகளப் போட்டியில் தேசிய அளவில் தலா வெள்ளி, வெண்கல பதக்கங்களும், தமிழக அளவில் 2 தங்க பதக்கங்களும், தலா ஒரு வெள்ளி, வெண்கல பதக்கங்களும் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT