தமிழகம்

கரோனா பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றாத தனிநபர், நிறுவனங்களுக்கு ரூ.2.40 கோடி அபராதம்: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தகவல்

செய்திப்பிரிவு

சென்னையில் கரோனா பரவலைத் தடுக்கும் வழிமுறைகளைப் பின்பற்றாத தனி நபர் மற்றும் நிறுவனங்களிடம் இருந்து இதுவரை ரூ.2 கோடியே 40 லட்சத்து 86 ஆயிரத்து9 அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது.

தமிழக நகர்ப்புற மற்றும் ஊரக உள்ளாட்சி அமைப்புகள் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் வளர்ச்சிப் பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம், அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில், தலைமைச் செயலகத்தில் நேற்று நடந்தது. இக்கூட்டத்தில் அவர் பேசியதாவது:

சென்னை மாநகராட்சியில் தற்போது 12 ஆயிரத்து 283 பேர் மட்டுமே கரோனா தொற்று சிகிச்சை பெற்று வருகின்றனர். அக்.4-ம் தேதி நிலவரப்படி 14 லட்சத்து 78 ஆயிரத்து 196 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.

மெரினா கடற்கரையில் தற்போது வரை பொதுமக்களுக்கு அனுமதி இல்லை. முகக் கவசம் அணியாமல் வெளியில் சென்ற தனிநபர்கள் மற்றும் அரசின் கரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றாத வணிக நிறுவனங்கள் மற்றும் கடைகளில் இதுவரை ரூ.2 கோடியே 40 லட்சத்து 86 ஆயிரத்து 9 அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

தொடர்ந்து நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சி துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும்பணிகள் குறித்து அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஆய்வு மேற்கொண்டார். இக்கூட்டத்தில் ஊரக வளர்ச்சித் துறை செயலர் ஹன்ஸ்ராஜ் வர்மா, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலர் ஹர்மந்தர் சிங், சென்னை மாநகராட்சி ஆணையர் கோ.பிரகாஷ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

SCROLL FOR NEXT