பிரதமரின் கிசான் சம்மன் திட்டத்தில் போலி ஆவணங்களைத் தயாரித்துப் பண மோசடியில் ஈடுபட்ட ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சேர்ந்த இடைத்தரகரை சிபிசிஐடி காவல் துறையினர் இன்று (அக்.5) கைது செய்தனர்.
மத்திய அரசு சார்பில் சிறு, குறு விவசாயிகளுக்கு நிதியுதவி வழங்கும் பிரதமரின் கிசான் சம்மன் திட்டத்தில் தமிழகத்தில் விவசாயிகள் அல்லாதவர்கள் போலி ஆவணங்களைக் காட்டி சுமார் ரூ.100 கோடிக்கு மேல் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளது விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது.
இது தொடர்பாக சிபிசிஐடி காவல் துறையினர், வேளாண்மைத் துறை அதிகாரிகள், வருவாய்த் துறையினர், வங்கி அலுவலர்கள் தனித்தனியாக விசாரணை நடத்தி வருகின்றனர். விவசாயிகள் அல்லாதவர்கள் மோசடி செய்து பெற்ற பணம், அரசு அதிகாரிகள் மூலம் வசூலிக்கப்பட்டு வருகிறது.
ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்திலும் ஆயிரக்கணக்கானோர் போலி ஆவணங்களைக் காட்டி இத்திட்டத்தில் பணத்தைப் பெற்று மோசடி செய்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது. அவர்களிடம் இருந்து பணத்தைப் வசூலிக்கும் பணிகள் தற்போது தீவிரமாக நடந்து வருகின்றன. வேலூர் மாவட்டத்தில் இந்த மோசடியில் தொடர்புடைய வேளாண் துறையில் பணியாற்றி வந்த தற்காலிகக் கணினி ஆபரேட்டர்கள் 8 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
வேலூர், ராணிப்பேட்டை மாவட்டத்தில் கிசான் சம்மன் திட்டத்தில் முறைகேட்டில் ஈடுபட்ட 4 பேர் கைது செய்யப்பட்டனர். அதேபோல, திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை ஒன்றியத்தைச் சேர்ந்த பாஜக நிர்வாகி கண்மணி என்பவரும், கணினி மையத்தின் உரிமையாளரான ஜெகநாதன் என்பவரும் சமீபத்தில் கைது செய்யப்பட்டனர்.
ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் கிசான் சம்மன் திட்டத்தில் மோசடியில் ஈடுபட்ட 6 பேரை சிபிசிஐடி காவல் துறையினர் இதுவரை கைது செய்துள்ளனர். இவர்களிடம் சிபிசிஐடி காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தி, கிசான் சம்மன் திட்டத்தில் மோசடியில் ஈடுபட்டவர்களின் பட்டியலைத் தயார் செய்து அதன்படி விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
இந்நிலையில், ராணிப்பேட்டை மாவட்டம், சீக்கராஜபுரம் பகுதியைச் சேர்ந்த இடைத்தரகர் சுப்பிரமணி (58) என்பவர் போலியாக ஆவணங்களைத் தயாரித்து கிசான் சம்மன் திட்டத்தில் பணமோசடி செய்தது உறுதி செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து, சிபிசிஐடி காவல் துறையினர் சுப்பிரமணியத்தை இன்று கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.