சார்பு ஆய்வாளர் பணிக்கான எழுத்துத்தேர்வில் நடைபெற்ற முறைகேடு தொடர்பான விசாரணை முடியும் வரை யாருக்கும் பணி நியமன உத்தரவு வழங்கக்கூடாது என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் 969 உதவி காவல் ஆய்வாளர்களை தேர்வு செய்வது தொடர்பாக சீருடைப் பணியாளர் தேர்வாணையம் கடந்த ஆண்டு மார்ச் மாதம் அறிவிப்பு வெளியிட்டது.
இப்பணிக்கு கடந்த ஜனவரி 12, 13 ஆகிய தேதிகளில் எழுத்துத் தேர்வு நடைபெற்றது. மார்ச் 16-ம் தேதி தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன.
இந்நிலையில் ஜனவரி 12, 13 ஆகிய தேதிகளில் நடைபெற்ற எழுத்துத் தேர்வை ரத்து செய்யக்கோரி மதுரைச் சேர்ந்த தென்னரசு உட்பட பலர் உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்தனர்.
அதில், சார்பு ஆய்வாளர் பணிக்கான எழுத்துத்தேர்வில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றுள்ளன. கடலூர், வேலூரில் உள்ள குறிப்பிட்ட மையங்களில் படித்தவர்கள் அதிகளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். புத்தகத்தை பார்த்து தேர்வெழுத அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
எனவே, மார்ச் மாதம் வெளியிடப்பட்ட எழுத்துத் தேர்வு முடிவுகளின் அடிப்படையில் உதவி காவல் ஆய்வாளர் பணியிடங்களை நிரப்ப இடைக்கால தடை விதிக்க வேண்டும் எனக் கூறப்பட்டிருந்தது.
இந்த மனுவை நீதிபதி சுரேஷ்குமார் விசாரித்து, முறைகேடு தொடர்பாக தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்தின் 3 பேர் குழு விசாரிக்க உத்தரவிட்டார்.
இந்நிலையில் இந்த உத்தரவை மாற்றியமைக்கக்கோரி மதுரை கச்சக்கட்டியைச் சேர்ந்த அசோக்குமார் உயர் நீதிமன்ற கிளையில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்தார். அதில் சார்பு ஆய்வாளர் பணி நியமன நடவடிக்கைகள் நடைபெற்று வருகின்றன.
உடல் தகுதித் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்டுள்ளனர். இதனால் முறைகேட்டில் ஈடுபட்டவர்களும் சார்பு ஆய்வாளர்களாக தேர்வு செய்ய வாய்ப்புள்ளது.
எனவே சார்பு ஆய்வாளர் பணி நியமன அறிவிப்பு, எழுத்துத் தேர்வில் வெற்றிப்பெற்றவர்கள் பட்டியல், உடல் தகுதித் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு நடவடிக்கைகளுக்கு தடை விதிக்க வேண்டும் எனக் கூறியிருந்தார்.
இந்த மனுவை நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புழேந்தி அமர்வு விசாரித்தது, சார்பு ஆய்வாளர் தேர்வு முறைகேடு தொடர்பாக 3 பேர் குழு விசாரணை முடியும் வரை பணி நியமன உத்தரவு வழங்கக்கூடாது என உத்தரவிட்டது.