தமிழகம்

கட்டுமானத் தொழிலாளர்களுக்கு ரூ.5 ஆயிரம் ஓய்வூதியம்: அரசுக்கு கட்டிட தொழிலாளர் சங்கம் வேண்டுகோள்

சுப.ஜனநாயகச் செல்வம்

கட்டுமானத் தொழிலாளர்களின் மாத ஓய்வூதியத்தை ரூ.5 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு தமிழ் மாநில கட்டிடத் தொழிலாளர் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

மதுரை பழங்காநத்தத்தில் தமிழ் மாநில கட்டிடத் தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் மாவட்ட தலைவர் டி.சூரியகண்ணன் தலைமையில் நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் ரா.கணேசன் முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில், கட்டுமானத் தொழிலாளர்களின் நலனுக்காகத் திரட்டப்பட்ட நிதியை அரசின் மற்ற திட்டங்களுக்குப் பயன்படுத்தக் கூடாது. கட்டுமானத் தொழிலாளர்களுக்கு இஎஸ்ஐ மருத்துவ வசதியை அமல்படுத்த வேண்டும். கட்டுமானத் தொழிலாளர்களின் மாத ஓய்வூதியத்தை ரூ.5 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும்.

கட்டுமானத் தொழிலாளர்களின் ஓய்வூதியம், இயற்கை மரணம் தொடர்பான விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்ற ஒரு மாதத்துக்குள் உதவிகள் கிடைக்கச் செய்ய வேண்டும். தொழிலாளர் நல வாரியத்தின் சர்வர் குறைகளைச் சரி செய்து தாமதமின்றி அடையாள அட்டை வழங்க வேண்டும்.

இணையத்தில் பதிவு செய்ய ஒடிபி முறையை ஆந்திரா, கர்நாடகா போல் ரத்து செய்ய வேண்டும். கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியப் பணியாளர்கள் தேர்வில் கட்டுமானத் தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கு 30 சதவீத பணி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதில், மாவட்டப் பொருளாளர் கே.கண்ணன், மாவட்ட துணைச் செயலாளர்கள் பி.செல்வம், எஸ்.ரவி, மாவட்ட துணைத் தலைவர் கே.முருகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

முடிவில் நிர்வாகி எம்.மாரிமுத்து நன்றி கூறினார்.

SCROLL FOR NEXT