தட்டார்மடம் செல்வன் கொலை வழக்கு தொடர்பாக காவலில் எடுத்துள்ள 4 பேரையும் சிபிசிஐடி போலீஸார் தட்டார்மடம் பகுதிக்கு நேரில் அழைத்து வந்து இன்று விசாரணை நடத்தினர்.
தூத்துக்குடி மாவட்டம் தட்டார்மடம் அருகே உள்ள சொக்கன் குடியிருப்பைச் சேர்ந்த தனிஸ்லாஸ் மகன் செல்வன் (35). இவர் கடந்த மாதம் 17-ம் தேதி நிலத்தகராறு தொடர்பாக காரில் கடத்தி கொலை செய்யப்பட்டார்.
இது தொடர்பாக தட்டார்மடம் காவல் ஆய்வாளராக இருந்த ஹரிகிருஷ்ணன், அதிமுக பிரமுகர் திருமணவேல் உள்ளிட்ட 6 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதில், முத்துராமலிங்கம், சின்னத்துரை ஆகிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
திருமணவேல், அவரது சகோதரர் முத்துகிருஷ்ணன் ஆகியோர் சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சரணடைந்தனர். மேலும், காவல் ஆய்வாளர் ஹரிகிருஷ்ணன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
இந்த வழக்கு சிபிசிஐடி போலீஸாருக்கு மாற்றப்பட்டதைத் தொடர்ந்து, காவல் ஆய்வாளர் உள்ளிட்ட 6 பேர் மீதும் சிபிசிஐடி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் இந்த வழக்கில் சிறையில் உள்ள 4 பேரையும் 7 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி போலீஸாருக்கு கோவில்பட்டி முதலாவது குற்றவியல் நீதித்துறை நடுவர்மன்றம் கடந்த 30-ம் தேதி அனுமதி அளித்தது.
அதன்பேரில் 4 பேரையும் சிபிசிஐடி போலீஸார் தங்கள் காவலில் எடுத்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் 4 பேரையும் இன்று டிஎஸ்பி அணில்குமார் தலைமையில் சிபிசிஐடி போலீஸார் தட்டார்மடம் பகுதிக்கு நேரில் அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.
முதலில் தச்சவிளையில் உள்ள முத்துகிருஷ்ணன் வீட்டுக்கு அவர்களை அழைத்து சென்று சுமார் 45 நிமிடங்கள் விசாரணை நடத்தினர்.
மேலும், கார் நம்பர் பிளேட்டை காட்டு பகுதியில் போட்டதாக அவர் கூறியதன் அடிப்படையில் அந்த பகுதிக்கு சென்று நம்பர் பிளேட்டை எடுத்துள்ளனர்.
பின்னர் பூச்சிக்காடு- திசையன்விளை சாலையில் உள்ள திருமணவேல் தோட்டத்துக்கு அவர்களை அழைத்து சென்று அங்கு வைத்து தீவிரமாக விசாரணை நடத்தினர். அந்த தோட்டத்தில் வைக்கப்பட்டுள்ள சிசிடிவி காட்சிகளையும் ஆய்வு செய்தனர்.
மேலும், செல்வனை காரில் கடத்திய கொழுந்தட்டு பகுதி, அவரை தாக்கிவிட்டு கீழே தள்ளிவிட்ட பகுதியான கடகுளம் ஆகிய பகுதிகளுக்கும் அவர்களை நேரில் அழைத்து சென்று சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்தினர்.
சிபிசிஐடி போலீஸாருடன் தடய அறிவியல் நிபுணர்கள் உள்ளிட்ட சுமார் 35 போலீஸார் வந்திருந்தனர். 7 நாட்கள் காவல் முடிவடைவதை தொடர்ந்து 4 பேரையும் சிபிசிஐடி போலீஸார் நாளை (அக். 06) மீண்டும் கோவில்பட்டி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.