தமிழகம்

உ.பி. தலித் பெண் பாலியல் கொலை வழக்கு; ஆளுநர் மாளிகை நோக்கிப் பேரணி: கனிமொழி உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் கைது

செய்திப்பிரிவு

உத்தரப் பிரதேசத்தில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுக் கொலை செய்யப்பட்ட தலித் பெண்ணுக்கு நீதி கேட்டு ஆளுநர் மாளிகையை நோக்கிப் பேரணியாகச் சென்ற திமுக மகளிரணிச் செயலாளர் கனிமொழி உள்ளிட்ட ஆயிரக்கணக்கான திமுக மகளிரணியினர் கைது செய்யப்பட்டனர்.

உத்தரப் பிரதேச மாநிலம் ஹாத்தரஸில் தலித் பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கடுமையாகத் தாக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார். அதைத் தொடர்ந்து நடந்த நிகழ்வுகள் இந்தியா முழுவதும் பெரிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து அறிக்கை வெளியிட்டிருந்த திமுக தலைவர் ஸ்டாலின், “ஒரு பெண், பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு, உயிர் போகும் அளவுக்குச் சித்திரவதை செய்யப்பட்டுள்ளார்.

தன்னைக் குதறியவர்கள் யார் என்பதையும் அப்பெண் மரணவாக்குமூலமாகக் கொடுத்துவிட்டு மரணம் அடைந்துள்ளார். இந்தச் சூழலில் அப்பெண்ணின் குடும்பத்துக்கு ஆறுதலாகவும், நம்பிக்கையாகவும் இருந்திருக்க வேண்டிய உ.பி. பாஜக அரசு, எதிர்மறையாக நடந்து கொண்டுள்ளது.

அப்பெண்ணின் உடல், அவரது பெற்றோரிடம் ஒப்படைக்கப்படவில்லை. அவரது பெற்றோருக்குத் தெரியாமல் அவசர அவசரமாக உடல் எரியூட்டப்பட்டுள்ளது. பெண்ணின் தந்தை கடத்திச் செல்லப்பட்டதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. உடல் எரியூட்டப்பட்ட பிறகு பேட்டியளித்த காவல்துறை அதிகாரி, அப்பெண் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்படவில்லை என்று பேட்டி அளித்துள்ளார்.

பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு ஆறுதல் சொல்லச் சென்ற அகில இந்திய காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ராகுல் காந்தியையும், பிரியங்கா காந்தியையும் அனுமதிக்காமல் உ.பி. காவல் துறையினர் தடுத்துள்ளார்கள். அதைவிட அராஜகமாக, ராகுல் காந்தியின் நெஞ்சைப் பிடித்து ஒரு காவல்துறை அதிகாரி தள்ளுகிறார். அவர் விழும் காட்சி, இந்தியாவின் நாடாளுமன்ற ஜனநாயகத்துக்கே இழுக்கு ஆகும்.

இதனை வலியுறுத்தி தமிழக ஆளுநர் மாளிகையை நோக்கிய பேரணி நடத்தத் திட்டமிட்டுள்ளது திராவிட முன்னேற்றக் கழக மகளிரணி, அநியாயமாகக் கொல்லப்பட்ட பெண்ணுக்கு நீதி கேட்டு, மகளிரணிச் செயலாளர் கனிமொழி தலைமையில் ஒளியேந்தி அணிவகுக்க இருக்கிறது மகளிரணி. நாளை மாலை (அக்டோபர் 5) ஐந்து மணியளவில் ஆளுநர் மாளிகையைப் பேரணியாக அணிவகுக்க இருக்கிறார்கள்” எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் உத்தரப் பிரதேசத்தில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொல்லப்பட்ட பட்டியலினப் பெண்ணுக்கு நீதி கேட்டு மெழுகுவர்த்தி ஒளியேந்தி, ஆளுநர் மாளிகை நோக்கி திமுக மகளிரணி பேரணி இன்று நடந்தது. திமுக தலைவர் ஸ்டாலின் இந்தப் பேரணியைத் தொடங்கி வைத்தார்.

ஆயிரக்கணக்கான மகளிர் அணியினர் இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆளுநர் மாளிகையை நோக்கிச் சென்ற கனிமொழி உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் போலீஸாரால் தடுத்து நிறுத்தப்பட்டுக் கைது செய்யப்பட்டனர். அவர்களைக் கைது செய்த போலீஸார் போலீஸ் வேனில் ஏற்றினர்.

ஆனால், சாலையில் வாகனங்கள் செல்வதைத் தடுத்து திமுகவினர் வழிமறித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பேரணி நடந்த சின்னமலையிலிருந்து கிண்டி ஹால்டா தாண்டி ஆயிரக்கணக்கான வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதனால் போக்குவரத்து நெருக்கடி ஏற்ப்பட்டது.

இதையடுத்து கனிமொழியிடம் நிலையை எடுத்துச் சொல்லி ஒத்துழைக்கும்படி போலீஸார் பேசினர். இதையடுத்து கனிமொழி தான் கைது செய்யப்பட்டு அடைக்கப்பட்ட வாகனத்திலிருந்து இறங்கி வந்து தொண்டர்களிடம் பேசினார். பொதுக்களுக்கு நாம் இடையூறாக இருக்கக்கூடாது எனக் கேட்டு, வாகனத்திற்கு வழிவிடச் சொன்னார். இதையடுத்து தொண்டர்கள் வழிவிட்டதை அடுத்து போலீஸ் வாகனத்தில் ஏறி கனிமொழி சென்றார்.

பேரணி நடந்த சின்னமலைப் பகுதியில் தொண்டர்கள் ஆயிரக்கணக்கில் குவிந்ததால் பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, அது சீரடைய சில மணி நேரம் ஆனது.

SCROLL FOR NEXT