பயிர் காப்பீடு வழங்கக் கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் ராமநாதபுரம் ஆட்சியர் அலுவலகத்தில் குடியேறும் போராட்டம் நடத்தினர்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் 2018-19-ம் ஆண்டில் பயிர் காப்பீடு செய்த விவசாயிகளுக்கு மத்திய, மாநில அரசுகள் இழப்பீடு வழங்க வலியுறுத்தி பலமுறை கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்காததை கண்டித்து, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் ராமநாதபுரம் ஆட்சியர் அலுவலகத்தில் இன்று குடியேறும் போராட்டம் நடைபெற்றது.
போராட்டத்திற்கு மாவட்டச் செயலாளர் வி.மயில்வாகனன் தலைமை வகித்தார். போராட்டத்தை மாவட்டத் தலைவர் எம்.முத்துராமு தொடங்கி வைத்தார். இப்போராட்டத்தில் 200-க்கும் மேற்பட்ட விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
சங்கத்தின் மாநில பொருளாளர் கே.பி.பெருமாள் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசும்போது, ராமநாதபுரம் மாவட்டத்தில் 2018-19-ம் ஆண்டில் 1.50 லட்சம் விவசாயிகள் பயிர் காப்பீடு செய்துள்ளனர்.
இதில் சுமார் 40,000 விவசாயிகளுக்கு மட்டும் இன்று வரை இழப்பீடு வழங்கவில்லை. மாவட்ட ஆட்சியரிடமோ, வேளாண் துறை அதிகாரிகளிடமோ பலமுறை முறையிட்டும் சரியான பதில் இல்லை.
காப்பீடு நிறுவனம் செயற்கைக்கோள் கணக்கெடுப்பில் விளைச்சல் அதிகம் கிடைத்துள்ளது எனக் கூறி இழப்பீட்டை வழங்காமல் இழுத்தடித்து வருகிறது. எனவே பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீட்டுத்தொகையை அரசு உடன் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறினார்.
அதனைத் தொடர்ந்து ஆட்சியர் கொ.வீரராகவ ராவ் மற்றும் ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(வேளாண்மை) தனுஷ்கோடி ஆகியோர், விவசாய சங்க பிரதிநிதிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது ஆட்சியர், வரும் 20-ம் தேதிக்குள் இழப்பீட்டுத் தொகையை பெற்றுத்தருவதாக உறுதியளித்தார். அதனையடுத்து விவசாயிகள் குடியேறும் போராட்டத்தை கைவிட்டு, கலைந்து சென்றனர்.