தமிழகம்

வைகை நீர் திறக்க உத்தரவாதம் இல்லாததால் பழைய ஆயக்கட்டு விவசாயிகள் அதிருப்தி

இ.ஜெகநாதன்

வைகை தண்ணீர் திறக்க உத்தரவாதம் இல்லாததால் சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்ட பழைய ஆயக்கட்டு விவசாயிகள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

வைகை நதி மூலம் தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்கள் பயன் பெறுகின்றன. பழைய ஆயக்கட்டு பகுதிகளில் 374 கண்மாய்கள் மூலம் 1.36 லட்சம் ஏக்கர் பாசன வசதி பெற்றன. பெரியாறு அணை கட்டிய பின்பும், பெரியாறு மற்றும் வைகை நீர் மூலம் பழைய ஆயக்கட்டு பகுதிகள் வளம்கொழித்தன.

பல ஆண்டு கழித்து, ஏற்கனவே வைகை ஆயக்கட்டு பகுதியில் இருந்த கம்பம் பள்ளத்தாக்கு, வட, தெற்கு கால்வாய் உள்ளிட்ட பகுதிகளை இணைத்து முல்லை பெரியாறு பாசன பகுதி உருவாக்கப்பட்டது.

அதன்பிறகு வைகை அணை கட்டினால், தங்களுக்கு வரும் தண்ணீர் பாதிக்கப்படும் என பழைய ஆயக்கட்டு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் அணை கட்டினாலும் பழைய ஆயக்கட்டு பகுதிகளுக்கு வழங்கும் தண்ணீர் அளவு குறையாது என, அரசு உத்தரவாதம் கொடுத்தது.

மேலும் வைகை நீரில் மதுரை குடிநீர் தேவை, நீர் ஆவியாதல் போன்ற இழப்பு ஆகியவற்றை கழித்தது போக மீதியில் ராமநாதபுரம் மாவட்டத்திற்கு 7 பங்கு, சிவகங்கை மாவட்டத்திற்கு 3 பங்கு, மதுரை மாவட்டத்திற்கு 2 பங்கு தண்ணீர் திறக்கப்படும் என அரசாணை வெளியிடப்பட்டது.

அக்காலக்கட்டத்தில் வைகை அணைக்கு போதிய அளவிற்கு தண்ணீர் வந்ததால், தண்ணீர் திறப்பில் சிக்கல் ஏற்படவில்லை. இதனால் உழவு முதல் அறுவடை வரை ஒவ்வொரு கட்டத்திற்கும் எவ்வளவு தண்ணீர் திறப்பது என்ற அளவீடு குறிப்பிட்டு உத்தரவாதத்துடன் கூடி அரசாணை வெளியிடவில்லை.

காலப்போக்கில் வைகை துணை ஆறுகளான வைரவனாறு, சுருளியாறு, முல்லையாறு, வரட்டலாறு, சுத்தகங்கை, கொட்டகுடியாறு, கல்லாறு, பாம்பாறு, குடமுருட்டியாறு, தேனியாறு, வராகநதி, மஞ்சளாறு, மருதாநதி ஆகிய சிற்றாறுகள் குறுக்கே ஆங்காங்கே அணைகள் கட்டப்பட்டன. இதனால் வைகை அணைக்கு வரும் நீரின் வரத்து குறைந்தது.

மேலும் வைகை அணையில் சேகரிக்கப்படும் பெரியாறு நீர், பெரியாறு பாசன பகுதிகளுக்கு மட்டுமே திறக்கப்படும். வைகை பழைய ஆயக்கட்டு பகுதிகளுக்கு திறப்பதில்லை. மேலும் எந்த மாதத்தில் எவ்வளவு தண்ணீர் திறக்க வேண்டும் என்ற உத்தரவாதம் இல்லாததால், சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டத்தில் பழைய ஆயக்கட்டு பகுதிகளுக்கு முறையாக திறப்பதில்லை. இதனால் அப்பகுதிகள் ஆண்டுதோறும் கடுமையாக பாதிக்கப்படுகின்றன.

அப்படியே திறந்தாலும் குறைவான தண்ணீரே திறக்கப்படுவதலா் சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் கடைமடை கோடி வரை தண்ணீர் செல்வதில்லை.

இதனால் பல இடங்களில் விவசாயம் செய்ய முடியாத நிலை உள்ளது. இதையடுத்து வைகை நீர் திறப்புக்கு உத்தரவாதத்துடன் கூடிய அரசாணை வெளியிட வேண்டுமென, சிவகங்கை மாவட்ட வைகை பழைய ஆயக்கட்டு விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

சிவகங்கை மாவட்ட வைகை பாசன விவசாயிகள் சங்க பொதுச் செயலாளர் ஆதிமூலம் கூறியதாவது: 125 ஆண்டுகளுக்கு முன், ஏற்படுத்திய பெரியாறு பாசன பகுதி இருபோக சாகுபடியும், பெரியாறு விரிவாக்க பகுதிகள் ஒருபோக சாகுபடியும் செய்து வருகின்றனர். ஆனால் வைகை ஆற்றில் முறையாக தண்ணீர் திறக்காததால் சங்ககாலத்தில் இருந்தே பயனடைந்த பழைய ஆயக்கட்டு விவசாய நிலங்கள் தரிசாக விடப்பட்டன.

அதேபோல் வைகையில் இருக்கும் 100-க்கும் மேற்பட்ட குடிநீர் திட்டங்களும் பாதிக்கப்படுகின்றன. வைகை, பெரியாறு நீரை சேர்த்து வழங்க வைகை அணையே கட்டப்பட்டது. ஆனால் வைகை, பெரியாறு நீரை தனித்தனியாக கணக்கிட்டு, வைகை நீரை மட்டும் பழைய ஆயக்கட்டு பகுதிகளுக்கு திறக்கின்றனர்.

அதுவும் தண்ணீர் திறப்புக்கு உத்தரவாதத்துடன் கூடிய அரசாணை இல்லாததால் அதிகாரிகள் தங்கள் விருப்பப்படி தண்ணீர் திறக்கின்றனர். இதனால் பழைய ஆயக்கட்டு பகுதிகளில் விவசாயம் கடுமையாக பாதிக்கப்படுகிறது. அக்.15-க்குள் தண்ணீர் திறந்தால் தான் ஒருபோக விவசாயம் செய்ய முடியும், என்று கூறினார்.

SCROLL FOR NEXT