கோவையில் இருந்து கேரளாவுக்கு அரசின் மானிய விலை உரங்களைக் கடத்தும் கும்பலைப் பிடிக்க வேளாண்மைத் துறை அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
அரசு மானியத்தில் வழங்கப்படும் உரம் கோவையில் இருந்து கேரளாவுக்குக் கடத்தப்படுவதாகப் புகார் எழுந்துள்ளது. இதையடுத்து மாவட்ட எல்லைகள் தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருகின்றன.
கோவை மாவட்டத்தில் உள்ள வேளாண் நிலங்களில் விவசாயத்திற்குப் பயன்படுத்தும் உரங்களுக்கு மத்திய அரசு மானியம் வழங்கி வருகிறது. இதேபோல் நேரடி விவசாயத்திற்கு மட்டுமின்றி அரசால் அங்கீகரிக்கப்பட்ட கலவை உரங்கள் தயாரிப்பு நிறுவனங்கள், மானிய விலை உரங்களை மூலப்பொருட்களாக மட்டும் பயன்படுத்திக் கொள்ள அனுமதிக்கப்படுகிறது.
இந்நிலையில் விவசாயம் மற்றும் மூலப்பொருட்கள் தயாரிப்புக்குப் பயன்படுத்தப்படும் உரங்களை, கோவை மாவட்ட எல்லைகள் வழியாக அண்டை மாநிலமான கேரளாவுக்குக் கடத்துவதாகப் புகார் எழுந்தது. இதையடுத்து வாளையாறு, ஆனைக்கட்டி வழியாக கேரளாவுக்குள் செல்லும் மாவட்ட எல்லைகளை கோவை மாவட்ட வேளாண்மைத் துறையினர் தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனர்.
இதுகுறித்துக் கோவை வேளாண்மை இணை இயக்குநர் (பொ) டாம் பி.சைலஸ், 'இந்து தமிழ்' செய்தியாளரிடம் கூறியதாவது:
''தமிழ்நாடு வேளாண்மை இயக்குநரகம் ஒவ்வொரு பருவத்துக்கும் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் தேவைக்கேற்ப மானிய விலையை உரம் ஒதுக்கீடு செய்துள்ளது.
இதன்படி கோவை மாவட்டத்திற்கு ராஃபி பருவத்திற்கு யூரியா 4,470 டன், டிஏபி 4,260 டன், பொட்டாஷ் 5,610 டன், காம்ப்ளக்ஸ் 7,700 டன் பெறப்பட்டு இருப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த உரங்களை விவசாயம் மற்றும் மூலப்பொருள் தயாரிப்பைத் தவிர மற்ற தேவைகளுக்குப் பயன்படுத்துவது உரக்கட்டுப்பாட்டுச் சட்டம் 1985 (25)-ன் படி சட்டப்படி குற்றமாகும்.
உரங்களை வெளி மாவட்டங்களுக்கோ, வெளி மாநிலங்களுக்கோ கடத்திச் செல்வது சட்டப்படி குற்றமாகும். கோவையில் கேரளாவுக்கு மானிய விலை உரங்களைக் கடத்திச் செல்வதாகப் புகார் வந்துள்ளது. இதையடுத்து மாவட்ட எல்லைகளில் வேளாண்மைத் துறையினர் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். உரக் கடத்தலில் ஈடுபவர்கள் மீது அத்தியாவசியப் பொருட்கள் சட்டம் 1955-ன் படி 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் அபராதமும் விதிக்கப்படும்.
அனைத்து உர வியாபாரிகளும் ஆதார் அட்டை கொண்டு வரும் விவசாயிகளுக்கு மட்டுமே உரம் விற்பனை செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. விவசாயிகள் அல்லாதவர்களுக்கு உரம் விற்பனை செய்யக்கூடாது.
இதேபோல் வெளி மாநிலங்களில் இருந்தோ, வெளி மாவட்டங்களில் இருந்தோ உரம் கொள்முதல் செய்யக்கூடாது. சில்லறை விற்பனையாளர்களுக்கு உரம் அனுப்பும்போது உரிய ஆவணங்களை வாகனங்களில் கொண்டு செல்ல வேண்டும். மானிய விலை உரங்களை வேறு பைகளிலோ அல்லது மறு பேக்கிங் செய்தோ விற்பனை செய்வது குற்றம். இவ்வாறு செய்பவர்களின் உர விற்பனை உரிமம் ரத்து செய்யப்படுவதுடன் அவர்கள் மீது கடும் நடவடிக்கையும் எடுக்கப்படும்''.
இவ்வாறு டாம் பி.சைலஸ் கூறினார்.