கோப்புப் படம் 
தமிழகம்

அக்.9-ல் வடக்கு அந்தமான் கடல் பகுதியில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி: வானிலை ஆய்வு மையம் தகவல்

செய்திப்பிரிவு

தமிழகத்தில் அக்.9-ல் வடக்கு அந்தமான் கடல் பகுதியில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்ட அறிவிப்பு:

“தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு ஓரிரு இடங்களில் லேசான மழையும், வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி காரணமாக அடுத்த 48 மணி நேரத்திற்கு உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

ஒரு புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி வரும் அக்டோபர் 9-ம் தேதி, வடக்கு அந்தமான் மற்றும் அதை ஒட்டியுள்ள மத்திய கிழக்கு வங்கக் கடல் பகுதியில் உருவாகக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸையும், குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸையும் ஒட்டி பதிவாகக்கூடும்.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்ச மழை பெய்த விவரம் எதுவுமில்லை.

மீனவர்களுக்கான எச்சரிக்கை :

குமரிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று 35 கிலோ மீட்டர் முதல் 45 கிலோ மீட்டர் வரை இன்று வீசக்கூடும். இப்பகுதிகளுக்குச் செல்லும் மீனவர்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

கடல் உயர் அலை முன்னறிவிப்பு ஏதுமில்லை”.

இவ்வாறு சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

SCROLL FOR NEXT