தமிழகம்

ஓபிஎஸ் ட்வீட்; மூத்த அமைச்சர்களுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை: சூடுபிடிக்கும் அதிமுக அரசியல் களம்

செய்திப்பிரிவு

அதிமுகவில் முதல்வர் வேட்பாளர் குழப்பம் நிலவிவரும் நிலையில், ஓபிஎஸ் தேனியில் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் முதல்வர் பழனிசாமியுடன் அதிமுக மூத்த அமைச்சர்கள் சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று ஆலோசனை நடத்தினர்.

தமிழகத்தில் ஆளும் கட்சியாக இருக்கும் அதிமுக அதன் முன்னாள் பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின் பல முறை சிக்கல்களைச் சந்தித்து வருகிறது. ஜெயலலிதா மறைவுக்குப் பின் சசிகலா கை ஓங்கியது. ஓபிஎஸ் உள்ளிட்ட அதிமுகவினரால் பொதுச் செயலாளராக சசிகலா தேர்வு செய்யப்பட்டார். முதல்வர் வேட்பாளராகவும் அவர் தேர்வு செய்யப்பட்ட நிலையில், ஓபிஎஸ் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். பதவியிலிருந்து விலகுமாறு கட்டாயப்படுத்தப்பட்டேன் என்றும் ஓபிஎஸ் குற்றம் சாட்டினார்.

பின்னர் சசிகலா முதல்வராகப் பொறுப்பேற்கவிருந்த நிலையில், சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை கிடைத்தது. இதனால் எடப்பாடி பழனிசாமியை முதல்வராக்கிவிட்டு கட்சியைக் கவனிக்க தினகரனையும் நியமித்துவிட்டுச் சென்றார்.

ஆனால், அதன்பின்னர் நடந்த அடுத்தடுத்த மாற்றங்களால் ஓபிஎஸ்- இபிஎஸ் இணைப்பு நடந்தது. ஓ.பன்னீர்செல்வம் துணை முதல்வர் ஆனார். தினகரன், சசிகலா ஆகியோர் கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டனர். சட்டத் திருத்தம் செய்ய முடியாவிட்டாலும், அடுத்த பொதுச் செயலாளர் நியமனம் வரும் வரையில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் ஏற்படுத்தப்பட்டன. ஒருங்கிணைப்பாளராக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளராக முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் உள்ளனர்.

இதன்பின்னர் கட்சியில் ஓபிஎஸ்ஸுக்கு உரிய மரியாதை இல்லை என்ற ஆதங்கம் அவரது ஆதரவாளர்கள் மத்தியில் இருந்தது. அனைத்து அதிகாரமிக்க செல்வாக்கான துறைகளை தன்வசம் வைத்திருந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி குறுகிய காலத்தில் தன்னை அதிமுகவின் தவிர்க்க இயலாத சக்தியாக மாறினார். இந்நிலையில் தேர்தல் நெருங்கிவரும் நேரத்தில் ஓபிஎஸ் தனது ஒருங்கிணைப்பாளர் அதிகாரத்தைக் காட்டத் தொடங்கியுள்ளார்.

முதல்வர் வேட்பாளர் யார் என அறிவிக்கவேண்டும் என்கிற ஓபிஎஸ் தரப்பின் கோரிக்கை கட்சியின் செயற்குழு வரை எதிரொலித்தது. இதனால் முதல்வர் வேட்பாளர் யார் என்பதை தீர்மானிக்க ஓபிஎஸ்- இபிஎஸ் முடிவெடுப்பார்கள் என அறிவிக்கப்பட்டது. ஆனால், இதுவரை இருவரும் இணைத்து ஆலோசனை நடத்தியதாகத் தெரியவில்லை.

தேனிக்குச் சென்ற ஓபிஎஸ் அங்கு ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். தென் மாவட்டத்தில் ஆர்.பி.உதயகுமார் மட்டுமே அவரைச் சந்தித்துள்ளார். ஆலோசனைக்குப் பின் கட்சி அரசியலில் முதன்முதலாக தனது நிலைப்பாட்டைத் தெரிவிக்கும் வகையில் கீதையின் வரிகளை மேற்கோள் காட்டி மக்கள் நலனுக்கேற்ப முடிவு இருக்கும் என ஓபிஎஸ் ட்வீட் போட்டார். அது காலையிலிருந்து பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் சென்னை தலைமைச் செயலகத்தில் காணொலி மூலம் பல்வேறு துறைசார்ந்த கட்டிடங்களை முதல்வர் பழனிசாமி இன்று திறந்து வைத்தார். பின்னர் அவருடன் மூத்த அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், செங்கோட்டையன், சி.வி.சண்முகம், எஸ்.பி.வேலுமணி, தங்கமணி மற்றும் அமைச்சர்கள் ராஜேந்திர பாலாஜி, வெல்லமண்டி நடராஜன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இதன்மூலம் இரு தரப்பிலும் இந்த விவகாரம் சூடுபிடித்துள்ளது. தமிழக அரசியல் களத்திலும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT