தமிழகம்

புதிய தமிழகம் போராட்டம் நாளை திட்டமிட்டபடி நடக்குமா?-உச்சகட்ட பரபரப்பில் தென்மாவட்டங்கள்

கே.கே.மகேஷ்

தேவேந்திர குல வேளாளர் அரசாணை மற்றும் பட்டியலின வெளியேற்றக் கோரிக்கையை வலியுறுத்தி நாளை (செவ்வாய்க்கிழமை) தமிழ்நாடு முழுக்க 10 ஆயிரம் இடங்களில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும் என்று புதிய தமிழகம் கட்சி அறிவித்திருந்தது.

மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் கிராமங்களில் நடைபெறும் இந்த உண்ணாவிரதமானது காலை 9 மணிக்குத் தொடங்கி மாலை 5 மணி வரையில் நடைபெறும் என்று அக்கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி கூறியிருந்தார்.

இதன்படி, தேவேந்திர குல வேளாளர் சமூகத்தினர் அதிகமாக வாழும் தென்மாவட்டங்களில் போராட்ட ஏற்பாடுகளை அக்கட்சியினர் தீவிரமாகச் செய்துவந்தனர். ஆனால், கரோனா ஊரடங்கு தொடர்வதால் உண்ணாவிரதப் போராட்டத்துக்கு பல்வேறு மாவட்டக் காவல் கண்காணிப்பாளர்கள் அனுமதி மறுத்துள்ளனர்.

இதுகுறித்து ராமநாதபுரம் மாவட்டச் செயலாளர் விஜயசேகரனிடம் கேட்டபோது, "ராமநாதபுரம் மாவட்டத்தில் 347 இடங்களில் போராட்டம் நடத்துவதற்கான ஏற்பாடுகளைச் செய்துவிட்டோம். ராமநாதபுரம் நகரைச் சுற்றியே கருங்குளம், கொட்டகை, தேவேந்திரநகர், பேராவூர், சூரங்கோட்டை காலனி, இந்திராநகர், சிவஞானபுரம், அம்மன்கோயில் என்று பல இடங்களில் போராட்டம் நடக்கிறது. இந்தச் சமூகத்தின் 25 ஆண்டு கால கோரிக்கை என்பதால், ஒட்டமொத்த சமூகத்தினரும் போராட்டத்தில் பங்கேற்க எழுச்சியோடு காத்திருக்கிறார்கள். சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்கிறோம், முகக்கவசம் அணிந்து பங்கேற்போம் என்று உறுதிமொழி அளித்தும் கூட காவல்துறை இதற்கு அனுமதி மறுத்துவிட்டது. இருந்தாலும் திட்டமிட்டபடி நாளை போராட்டம் நடைபெறும்" என்றார்.

"திருநெல்வேலி மாநகரில் பாளையங்கோட்டை ஜோதிபுரம் திடலில் அனுமதி கேட்டிருந்தது புதிய தமிழகம் கட்சி. ஆனால், அதற்கும் அனுமதி கிடைக்கவில்லை. இதே பட்டியலின வெளியேற்றம் கோரிக்கையை வலியுறுத்தி ஜான் பாண்டியனின் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் கடந்த 29-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தியது. பிறகு அதே இடத்தில் திமுக போராட்டத்திற்கும் போலீஸார் அனுமதி கொடுத்தார்கள். நாங்கள் அமைதியான முறையில் உண்ணாவிரதம் இருக்க போலீஸார் அனுமதி மறுத்துவிட்டார்கள்" என்கிறார் நெல்லை மாநகர் மாவட்டச் செயலாளர் தங்கராம கிருஷ்ணன்.

மதுரையில் மொத்தம் 45 கிராமங்களில் உண்ணாவிரதப் போராட்டம் நடக்கிறது. மாநகரில் மதுரை பழங்காநத்தத்தில் போராட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்த நிலையில் போலீஸார் அனுமதி மறுத்துள்ளனர். இருந்தாலும் தடையை மீறி அந்த இடத்தில் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும் என்று மாவட்டச் செயலாளர் தெய்வம் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், "காவல் துறை அனுமதி மறுத்தாலும் இந்தப் போராட்டம் நடந்தே தீரும் என்று சற்று முன் இணையதள நேரலையில் பேசிய எங்கள் தலைவர் உறுதிபடச் சொல்லியிருக்கிறார். அந்தந்த கிராமங்கள், நகரங்களில் அனைவரும் தைரியமாக உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார். ஆளுங்கட்சியினர் நடத்துகிற கூட்டங்களுக்கு அனுமதி தருகிற காவல்துறை ஏன் நமக்கு மட்டும் அனுமதி தரவில்லை? காவல்துறை அவர்கள் கடமையைச் செய்யட்டும், நாம் நமது கடமையைச் செய்வோம் என்றும் அவர் கூறியிருக்கிறார். எனவே, திட்டமிட்டபடி போராட்டம் நடைபெறும்" என்றார்.

இதற்கிடையே, போராட்ட அறிவிப்பு வெளியிட்டுள்ள கிராமங்களில் முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட போலீஸார் தீவிரம் காட்டி வருகின்றனர். இதனால் நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம் உள்ளிட்ட தென்மாவட்டங்களில் பரபரப்பு நிலவுகிறது.

SCROLL FOR NEXT