நாகையில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள தீயணைப்பு நிலையக் கட்டிடத்தை தமிழக முதல்வர் பழனிசாமி காணொலி வழியாக இன்று திறந்து வைத்தார்.
நாகப்பட்டினம் நகரில் இருந்த தீயணைப்பு நிலையக் கட்டிடம் மிகவும் பழமையானதாக இருந்தது. அதனால் சிதலமடைந்து எப்போது வேண்டுமானாலும் இடியும் நிலையில் இருந்த அக்கட்டிடத்தில் பயந்தபடியே தீயணைப்பு ஊழியர்கள் பணியாற்றி வந்தனர்.
2017 மழைக் காலத்தில் மிகவும் ஆபத்தான நிலையில் இருந்த அக்கட்டிடம் குறித்து நாகை சட்டப்பேரவை உறுப்பினர் மு.தமிமுன் அன்சாரியின் கவனத்துக்குக் கொண்டு வரப்பட்டது. நேரில் வந்து பார்வையிட்ட அவர் மாவட்டத்தைச் சேர்ந்த கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் மற்றும் அப்போதய மாவட்ட ஆட்சியர் ஆகியோரை அழைத்து வந்து கட்டிடம் அபாய நிலையில் உள்ளதைச் சுட்டிக்காட்டினார்.
அவர்களும் நிலைமையை உணர்ந்துகொண்டு அப்போது அங்கிருந்த 6 தீயணைப்பு ஊழியர்களும் அங்கிருந்து வேறு இடத்துக்குச் செல்ல உத்தரவிட்டனர். அவர்கள் சென்ற அடுத்த நாள் பெய்த கனமழையால் கட்டிடம் இடிந்து விழுந்தது. முன்கூட்டியே எடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் உயிர்ச்சேதம் எதுவுமின்றி தீயணைப்பு வீரர்கள் உயிர் தப்பினார்கள்.
அதன் பிறகு, 28.10.2017 ல் அக்கட்டிடம் முழுமையாக இடிக்கப்பட்டது. அதற்குப் பதிலாக புதிய கட்டிடம் கட்ட மதிப்பீடு செய்யப்பட்டு 14.06.2018 ல் அடிக்கல் நாட்டப்பட்டு 22.11.2018 ல் கட்டுமானப் பணிகள் தொடங்கின. 12,2,17,674 ரூபாய் மதிப்பீட்டில் நிலைய அலுவலர் குடியிருப்புடன் கூடிய தீயணைப்பு நிலைய புதிய கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டுள்ள நிலையில் அதனை முதல்வர் எடப்பாடி பழனிசாமி காணொகிக் காட்சி மூலம் இன்று காலை திறந்து வைத்தார்.
அது தொடர்பாக நாகையில் நடைபெற்ற நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் பிரவின் பி.நாயர், நாகை சட்டப்பேரவை உறுப்பினர் மு.தமிமுன் அன்சாரி ஆகியோர் பங்கேற்றனர். மாவட்டக் கூட்டுறவு ஒன்றியத் தலைவர் வழக்கறிஞர் தங்க.கதிரவன், துறை சார்ந்த அதிகாரிகள், சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.