கன்னியாகுமரி மாவட்டம் நெல்லிகுளம் ஏலாவில் மழையின்போது அறுவடையான வயல்களில் வைக்கோல் அழிந்து வீணாகியுள்ளது. படம்: எல்.மோகன் 
தமிழகம்

குமரியில் அறுவடையின்போது மழையில் சிக்கிய 4,500 ஹெக்டேர் வைக்கோல் வீணாகி வருவாய் இழப்பு: டெல்டா மாவட்டங்களில் இருந்து கொள்முதல் செய்யும் நிலை

எல்.மோகன்

கன்னியாகுமரி மாவட்டத்தில் நெல் அறுவடையின்போது மழையில் சிக்கிய 4,500 ஹெக்டேர் வயல்களில் வைக்கோல் வீணாகி விவசாயிகளுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. கால்நடை வளர்ப்போர் டெல்டா மாவட்டங் களில் இருந்து வைக்கோல் கொள்முதல் செய்து வருகின்றனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் 6,500 ஹெக்டேரில் பயிரிடப்பட்டிருந்த கன்னிப்பூ நெல் அறுவடை பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளன. இதுவரை 80 சதவீத வயல்களில் அறுவடை நடந்துள்ளது. அம்பை 16 நெல் ரகம் நல்ல மகசூலை கொடுத்திருந்த போதிலும், முழுமையான பலனை பெறமுடியாத நிலை ஏற்பட்டது. ஆண்டுதோறும் கன்னிப்பூ அறுவடை நேரத்தில் இடையூறை ஏற்படுத்தும் மழை, இந்த ஆண்டு வழக்கத்தை விட அதிகமாக பெய்தது. இதனால் பாதிக்கும் மேற்பட்ட வயல்களில் நெல் அறுவடை செய்ய முடியாமல் விவசாயிகள் தவித்தனர்.

மணவாளக்குறிச்சி பெரியகுளம், இறச்சகுளம், திருப்பதிசாரம், நெல்லிகுளம், வேம்பனூர் பகுதியில் நெற் பயிர்கள் தண்ணீரில் மூழ்கின. இதனால் விவசாயிகள் இழப்பைச் சந்தித் தனர். ஆனாலும் வழக்கம் போல் இழப்புக்கு மத்தியில் கும்பப்பூ சாகுபடி பணிகளைத் தொடங்கியுள்ளனர்.

கடும் நஷ்டம்

வழக்கமாக நெல் மகசூலுடன் வைக்கோல் மூலம் கிடைக்கும் வருவாயைக் கொண்டும் சாகுபடி செலவை ஓரளவு விவசாயிகள் சரிகட்டி வந்தனர். ஆனால் இந்த ஆண்டு நெற்பயிர்கள் மழையில் சிக்கியதால், பயன்படுத்த முடியாத அளவுக்கு வைக்கோல் வீணாயின. ஏக்கருக்கு 6 ஆயிரம் முதல் 8 ஆயிரம் ரூபாய் வரை அறுவடை நேரத்தில் வைக்கோலை விவசாயிகள் விற்பனை செய்வது வழக்கம். ஆனால் மழையில் நனைந்து சகதியில் மூழ்கிய வைக்கோலை பிரித்து எடுக்க முடியாமல், வயல்களிலேயே உரமாக்கி வருகின்றனர். சொந்த கால்நடைகளுக்கு கூட அவற்றை விவசாயிகளால் பயன்படுத்த முடியவில்லை.

தலைகீழான மாற்றம்

இதுகுறித்து கன்னியாகுமரி மாவட்ட நெல் விவசாயிகள் கூறும்போது, “ இந்த ஆண்டு 2 ஆயிரம் ஹெக்டேர் நிலப்பரப்பில் மட்டுமே வைக்கோலை சேதமா காமல் கரை சேர்க்க முடிந்தது. கேரளா உட்பட பிற பகுதிகளுக்கு வைக்கோலை கன்னியாகுமரி மாவட்ட விவசாயிகள் தான் அனுப்பி வைப்பர்.

தற்போது டெல்டா மாவட்டங்களில் இருந்து வைக்கோலை கன்னியாகுமரி மாவட்ட விவசாயிகள் கொள்முதல் செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது” என்றார்.

SCROLL FOR NEXT