தமிழகம்

தமிழகத்தில் கிராம சபை கூட்டத்தை நடத்த உத்தரவிடக் கோரி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் முறையீடு; மனுவாகத் தாக்கல் செய்தால் விசாரிக்கலாம்- நீதிபதிகள்

கி.மகாராஜன்

தமிழகத்தில் கிராம சபைக்கூட்டத்தை நடத்த உத்தரவிடக் கோரி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் முறையீடு செய்யப்பட்டது. அதை மனுவாகத் தாக்கல் செய்தால் விசாரிக்கலாம் என நீதிபதிகள் தெரிவித்தனர்.

மதுரையைச் சேர்ந்த அருண் அய்யனார் உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வு முன்பாக முறையீட்டை முன்வைத்தார்.

அதில்," இந்த ஆண்டு நடைபெற இருந்த கிராம சபைக் கூட்டம் ரத்து செய்து உத்தரவிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 26, மே1, ஆகஸ்ட் 15, அக்டோபர் 2 உள்ளிட்ட நாட்கள் கிராம சபை கூட்டம் நடைபெறுவது கட்டாயம்.

இந்த கூட்டங்களிலேயே கிராம வளர்ச்சி சார்ந்த பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்படும். இந்த தீர்மானங்களை அரசுகளே மீறுவது கடினம்.

அது போல வலுவான, மதிப்பு மிக்க கிராம சபைக்கூட்டத்தை கொரோனா பரவலையும், சமூக இடைவெளியை பொதுமக்கள் கடைபிடிக்க மாட்டார் எனக்கூறி ரத்து செய்யப்பட்டிருப்பது ஏற்கத்தக்கதல்ல.

ஆகவே, கிராம சபைக்கூட்டத்தை நடத்த உத்தரவிட வேண்டும். இதனை அவசர மனுவாக விசாரிக்க வேண்டும்" என கோரினார். இதனை மனுவாக தாக்கல் செய்தால் விசாரிப்பதாக நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

SCROLL FOR NEXT