தமிழகம்

இயற்கைக் காட்சிகளை ரசிக்கும் வகையில் டம்டம் பாறை உயர் கோபுரம் சீரமைக்கப்படுமா? - சுற்றுலாப் பயணிகள் எதிர்பார்ப்பு

செய்திப்பிரிவு

எலிவால் அருவி மற்றும் இயற்கைக் காட்சிகளை ரசிக்கும் வகையில் டம்டம் பாறையில் உள்ள உயர் கோபுரத்தை சீரமைத்துப் பயன்பாட்டுக்குக் கொண்டுவர வேண்டும் என்று சுற்றுலாப் பயணிகள் வலியுறுத்தி உள்ளனர்.

கொடைக்கானலுக்கு மலைச் சாலையில் பயணத்தைத் தொடங்கியதும் சில கிலோ மீட்டர் தொலைவிலேயே டம்டம் பாறை என்ற இடம் உள்ளது. இங்கு உயரமான இயற்கை எழில் சூழ்ந்த மலை முகட்டில் இருந்து கொட்டும் எலிவால் அருவியை பார்த்து ரசிப்பது தான் சுற்றுலாப் பயணிகளின் முதல் காட்சியாக அமைந்துள்ளது.

எலிவால் நீர்வீழ்ச்சி என்று அழைக்கப்படும் இந்த அருவி 973 அடி உயரத்தில் இருந்து கொட்டுகிறது. தமிழகத்தில் உள்ள உயரமான அருவிகளில் எலிவால் நீர்வீழ்ச்சிதான் முதலிடத்தில் உள்ளது. இந்த அருவியில் கொட்டும் நீர் ஓடையாகச் சென்று மலையடிவாரத்தில் உள்ள மஞ்சளார் அணையில் சேர்கிறது. தென்மேற்குப் பருவ மழை தொடங்கியது முதல் அருவியில் நீர் கொட்டத் தொடங்கும். கோடைக் காலத்தில் சில மாதங்கள் மட்டுமே இந்த அருவியில் நீர்வரத்து இருக்காது.

இந்த அருவியின் மேல்பகுதிக்குச் செல்ல 12 கிலோ மீட்டர் ஒற்றையடிப் பாதையில் நடந்து செல்ல வேண்டும். இங்கு ஒரு அம்மன் கோயில் உள்ளது. அருவிக்கு மேல் உள்ள பகுதியில் மலைப் பயிர்கள் சாகுபடி செய்யப் படுகின்றன.இங்கு பழங்குடியினர் வசிக்கின்றனர். டம்டம் பாறையில் சுற்றுலாப் பயணிகள் காரை நிறுத்தி அருவியைப் புகைப்படம் எடுக்க ஆர்வம் காட்டுகின்றனர். இந்த இடத்தில் அமைக்கப்பட்டுள்ள உயர் கோபுரம் பராமரிப்பின்றி உள்ளது. இதில் ஏறி இயற்கைக் காட்சிகளைக் காண சுற்றுலாப் பயணிகளை அனுமதிப்பதில்லை. இந்த உயர் கோபுரத்தைச் சீரமைத்துப் பயன்பாட்டுக்குக் கொண்டுவர வேண்டும் என்று சுற்றுலாப் பயணிகள் வலியுறுத்தி உள்ளனர்.

SCROLL FOR NEXT