முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசுவின் தாயார் ராஜாமணி அம்மாள் உயிரிழந்தார். திமுக இளைஞரணி செயலர் உதயநிதி ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார்.
முன்னாள் திமுக அமைச்சர் தங்கபாண்டியனின் மனைவியும், முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும், விருதுநகர் வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், திருச்சுழி சட்டமன்ற உறுப்பினருமான தங்கம்தென்னரசு மற்றும் தென்சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியனின் தாயாருமான ராஜாமணி தங்கபாண்டியன் (84) நேற்று இரவு உடல்நலக்குறைவால் உயிரிழந்தார்.
சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில், கடந்த ஒருமாத காலமாக சிகிச்சை பெற்றுவந்த அவர், நேற்று அவரது சொந்த கிராமமான மல்லாங்கிணறு வந்தார். நேற்று இரவு 8 மணிக்கு காலமானார்.
இன்று பிற்பகல் 3 மணிக்கு, தங்கம் தென்னரசுவின் இல்லத்தில் இருந்து துவங்கும் ராஜாமணி அம்மாளின் இறுதி ஊர்வலம், நகரின் வீதி வழியாக, தங்கப்பாண்டியனின் சமாதியை அடைந்து, 4 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.
தகவலறிந்த திமுகவினர் மற்றும் அந்த கிராமத்து பொதுமக்கள், தங்கம் தென்னரசு இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள அவரது தாயார் ராஜாமணி அம்மாளின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
சாத்தூர் ராமச்சந்திரன் எம்எல்ஏ, தென்காசி தொகுதி எம்.பி தனுஷ் குமார், தங்கப்பாண்டியன் எம்எல்ஏ, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன், முன்னாள் எம்.பி லிங்கம், முன்னாள் எம்எல்ஏ ராமசாமி, காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையா, முன்னாள் எம்பி சிப்பிப்பாறை ரவிச்சந்திரன், மதிமுக மாவட்டச் செயலாளர் சண்முகசுந்தரம். விருதுநகர் எம்எல்ஏ சீனிவாசன் ஆகியோரும் நேரில் அஞ்சலி செலுத்தினர்.