முதல்நாடு எல்லைப் பிடாரி அம்மன் கோயில் வழிபாட்டுக்குப் பிறகு அசைவ உணவு சாப்பிட அமர்ந்துள்ள ஆண்கள். 
தமிழகம்

கமுதி அருகே அம்மனை வழிபட ஆண்கள் மட்டும் பங்கேற்ற திருவிழா

செய்திப்பிரிவு

கமுதி அருகே ஆண்கள் மட்டும் பங்கேற்று அம்மனை வழிபடும் விநோதத் திருவிழா நடைபெற்றது.

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ளது முதல்நாடு கிராமம். இங்குள்ள கண்மாய்க் கரையில் உள்ள எல்லைப்பிடாரி அம்மனுக்கு பீடம் அமைத்து புரட்டாசி மாதம் ஆண்கள் மட்டும் பங்கேற்று வழிபடும் விநோதத் திருவிழா ஆண்டுதோறும் நடைபெறுகிறது.

முன்னொரு காலத்தில் 5 ஆண்களோடு பிறந்த ஒரு பெண், தனது அண்ணன் மனைவிகளால் துன்புறுத்தப்பட்டுள்ளார். இப்பெண் வீட்டில் இருந்து வெளியேறி, அங்குள்ள கண்மாய்க் கரை அருகே வந்தவுடன் மாயமாகி உள்ளார்.

பின்னர், முதல்நாடு கிராம மக்களின் கனவில் வந்த அப்பெண், இந்த இடத்தில் தெய்வமாக இருந்து காப்பாற்றுவேன் எனவும்,என்னை ஆண்கள் மட்டும் ஆண்டுக்கு ஒருமுறை வந்து வழிபட வேண்டும் எனவும் கூறியதாக ஐதீகம்.

அதன்படி, இத்திருவிழா நடைபெறும் தேதி அறிவித்தது முதல் ஒரு வாரத்துக்கு பெண்கள் யாரும் இப்பகுதிக்கு வருவதில்லை.

முதல்நாடு கிராமத்தில் இத்திருவிழா நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் ஆண்கள் ஒன்று கூடி எல்லை பிடாரி அம்மனுக்கு பீடம் அமைத்தனர்.

பின்னர் கைக்குத்தல் பச்சரிசி சோறு சமைத்து, 50 செம்மறி கிடாய்களை அம்மனுக்கு பலியிட்டனர். பின்னர் பச்சரிசி சோற்றை உருண்டைகளாக உருட்டி பீடத்துக்கு மாலை அணிவித்து நேற்று சிறப்புப் பூஜைகள் செய்தனர்.

அதன் பிறகு, ஆண்களுக்கு அசைவ உணவு பரிமாறப்பட்டது. மீதம் இருந்த உணவை அங்கேயே குழி தோண்டிப் புதைத்தனர். இத்திருவிழாவில், கமுதி மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆண்கள் பங்கேற்று அம்மனை வழிபட்டனர்.

இத்திருவிழாவில் கலந்து கொண்ட ஆண்கள் முகக்கவசம் அணியவில்லை. சமூக இடைவெளியை பின்பற்றாமல் விருந்தில் கலந்து கொண்டனர்.

SCROLL FOR NEXT