தமிழகத்தில் மேலும் 11 இடங்களில் அவசர சிகிச்சை மையங்கள் அமைக்கப்பட உள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே மதுரை-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கொடும்பாளூரில் ரூ.1 கோடி மதிப்பில் கட்டப்பட்ட மேம்படுத்தப்பட்ட அவசர சிகிச்சைமையத் திறப்பு விழா ஆட்சியர் பி.உமா மகேஸ்வரி தலைமையில் நேற்று முன்தினம் மாலை நடைபெற்றது.
தேசிய நலக்குழும திட்ட இயக்குநர் டாக்டர். கே.செந்தில்ராஜ் முன்னிலை வகித்தார். அவசர சிகிச்சைமையத்தை திறந்து வைத்துஅமைச்சர் சி.விஜயபாஸ்கர் பேசியது: தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலை ஓரங்களில் அமைக்கப்பட்டுள்ள 6 அவசர சிகிச்சை மையங்கள் மூலம் 56,586 பேருக்கு சிகிச்சைளிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மேலும் 11 இடங்களில் இதுபோன்ற மையங்கள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. வேலூர் மாவட்டம் மதனூர், கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி, சேலம்மாவட்டம் மகுடஞ்சாவடி, மதுரைகாமராஜர் பல்கலைக் கழகம், திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி ஆகிய இடங்களில் ஏற்படுத்தப்பட்டு வரும் மையங்கள் விரைவில் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என்றார்.