தேனி மாவட்டம் பெரியகுளத்தில் உள்ள பண்ணை வீட்டில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் 2-`ம்நாளாக நேற்றும் ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
வரும் சட்டப் பேரவைத் தேர்தலில் அதிமுக முதல்வர் வேட்பாளர் யார் என்பதில் முதல்வர் பழனிசாமிக்கும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கும் இடையே கருத்து வேறுபாடுஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் ஓ.பன்னீர் செல்வம் தனது சொந்த ஊரானபெரியகுளத்துக்கு வெள்ளிக்கிழமை இரவு வந்தார். சனிக்கிழமை பெரியகுளம், தேனி இடையே உள்ள லெட்சுமிபுரத்தில் பண்ணை வீட்டில் ஆதரவாளர்களைச் சந்தித்தார். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த ஏராளமான ஆதரவாளர்கள் அவருடன் ஆலோசனை நடத்தினர்.
அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், மதுரை (தெற்கு), உசிலம்பட்டி, சோழவந்தான், மேலூர் தொகுதி எம்எல்ஏக்கள் சரவணன், நீதிபதி, மாணிக்கம், பெரியபுள்ளான் ஆகியோர் ஓ.பன்னீர்செல்வத்தை நேற்றுமுன்தினம் இரவு சந்தித்து பேசினர்.
இந்நிலையில், 2-ம் நாளாகநேற்று காலையும் ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களைச் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
பிற்பகலில், காங்கயம், அருப்புக்கோட்டை தொகுதி முன்னாள் எம்எல்ஏக்கள் செல்வி, மணிமேகலை, திருப்பூர் வடக்குத் தொகுதி பாசறை செயலாளர் சந்திரசேகரன் உட்பட பலர் சந்தித்து பேசினர்.
செல்வி, மணிமேகலை ஆகியோர் கூறும்போது, கட்சியின் பொதுச் செயலாளராகவும், முதல்வர் வேட்பாளராகவும் ஓ.பன்னீர்செல்வமே இருக்க வேண்டும். அதற்கு ஆதரவு தெரிவிக்கவே வந்துள்ளோம் என்றனர்.
சிலை அமைக்க இடம் ஆய்வு
உசிலம்பட்டியில் பிகே மூக்கையாத் தேவருக்கு வெண்கலச்சிலை அமைய உள்ள இடத்தைதுணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று நேரில் ஆய்வு செய்தார். உசிலம்பட்டி அருகே உள்ள பாப்பாபட்டியில் பிறந்தவர் பி.கே.மூக்கையாத் தேவர். இவர் 5 முறை உசிலம்பட்டி எம்எல்ஏவாகவும், ஒரு முறை ராமநாதபுரம் தொகுதி எம்.பி.யாகவும் இருந்தார்.
தென் மாவட்ட மக்களுக்காக 3 கலைக் கல்லூரிகளை முத்துராமலிங்கத் தேவர் பெயரிலும், கள்ளர் சீரமைப்புத் துறை மூலம் பல்வேறு பள்ளிகளையும் கொண்டு வந்தவர். இவர் பசும்பொன் தேவரின் சீடராகவும் இருந்து மறைந்தவர்.
கடந்த மக்களவைத் தேர்தலில் அதிமுக சார்பில் தேனியில் போட்டியிட்ட ப.ரவீந்திரநாத்துக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்தமுதல்வரும், துணை முதல்வரும் உசிலம்பட்டி மக்களின் கோரிக்கையை ஏற்று பி.கே.மூக்கையாத் தேவருக்கு முழு உருவ வெண்கலச் சிலை அமைக்கப்படும் என வாக்குறுதி அளித்தனர்.
இந்நிலையில் உசிலம்பட்டி முத்துராமலிங்கத் தேவர் கல்லூரி விழா ஒன்றில் அண்மையில் பங்கேற்ற துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உசிலம்பட்டியில் தேவர் சிலை அருகே பிகே. மூக்கையாத் தேவருக்கு தனது சொந்த செலவில் சிலைஅமைக்கப்படும் என அறிவித்தார். இதற்கான அரசாணை செப்.15-ல் வெளியிடப்பட்டது.
இந்நிலையில், உசிலம்பட்டி நகரின் மையப் பகுதியில் மூக்கையாத் தேவர் சிலை அமைய உள்ளஇடத்தை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று நேரில் ஆய்வு செய்தார். பின்னர் பொதுப்பணித் துறை அதிகாரிகள், முக்கிய பொறுப்பாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது மதுரை புறநகர் மேற்கு மாவட்டச் செயலாளரும் அமைச்சருமான ஆர்பி.உதயகுமார் உடன் இருந்தார்.
மேலும் ஆய்வு நிகழ்ச்சியில் ரவீந்திரநாத் எம்.பி., எம்எல்ஏக்கள் நீதிபதி, மாணிக்கம், பெரியபுள்ளான், எஸ்எஸ். சரவணன், முன்னாள் எம்எல்ஏக்கள் தவசி, பாண்டியம்மாள் மற்றும் அதிமுக நிர்வாகிகள் திருப்பதி, வெற்றிவேல், போத்திராஜா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
முன்னதாக உசிலம்பட்டியில் உள்ள தேவர் சிலைக்கு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், ரவீந்திரநாத் குமார் எம்.பி. ஆகியோர் மாலை அணிவித்தனர்.