உத்தர பிரதேச மாநிலம் ஹத்ராஸ் பாலியல் வன்கொடுமை சம்பவத்தைக் கண்டித்து தமிழகத்தில் இன்றும் நாளையும் காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அக்கட்சியின் மாநிலதலைவர் கே.எஸ்.அழகிரி அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை:
ஹத்ராஸ் பாலியல் வன்கொடுமை சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது. படுகொலை செய்யப்பட்ட பெண்ணின் உடலை குடும்பத்தினரிடம் ஒப்படைத்து இறுதிச் சடங்கைகூட செய்ய வாய்ப்பளிக்காமல் இரவோடு இரவாக காவல்துறையினரே எரித்துள்ளனர். இது ஒரு அப்பட்டமான மனித உரிமை மீறலாகும்.
படுகொலை செய்யப்பட்ட பெண்ணின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூற சென்ற ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோரை உத்தர பிரதேச அரசு அனுமதிக்காததும், அதையும் மீறி அவர்கள் ஹத்ராஸ்சென்று ஆறுதல் கூறியதும் நாடுமுழுவதும் மிகப் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
ஹத்ராஸ் சம்பவத்தை கண்டித்து நாடு முழுவதும் போராட்டம் நடத்த காங்கிரஸ் முடிவு செய்துள்ளது. அதன்படி, வரும் 5, 6 தேதிகளில் (இன்றும், நாளையும்) மாலை 4 முதல் 6 மணி வரை மாவட்டம், நகராட்சிகளில் அமைந்துள்ள மகாத்மா காந்தி, அம்பேத்கர் சிலைகள் முன்பு அல்லது முக்கியப் பகுதிகளில் காங்கிரஸார் அமைதியான முறையில் போராட்டம் நடத்த வேண்டும். ஹத்ராஸ் சம்பவத்துக்கு நீதி கிடைக்கும் வரை காங்கிரல் போராடும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.