கரோனா ஊரடங்கில் தளர்வு அறிவிக்கப்பட்டதால், நீலகிரி மாவட்டத்தில் தோட்டக்கலைத் துறைக்குச் சொந்தமான பூங்காக்கள் மட்டும் திறக்கப்பட்டுள்ளன. தொடர் விடுமுறையால் உதகையிலுள்ள தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, தொட்டபெட்டா தேயிலைப் பூங்கா, மரவியல் பூங்கா, குன்னூர் சிம்ஸ் பூங்கா, காட்டேரி பூங்கா, கல்லாறு பழப் பண்ணைகள் என பல்வேறு பகுதிகளில் சுற்றுலாப் பயணிகள் திரண்டனர்.
பர்லியாறு மற்றும் குஞ்சப்பனை வழியாக உதகைக்குள் சுற்றுலா வாகனங்கள் நுழைகின்றன. இதனால் அங்குள்ள சோதனைச்சாவடிகளில் மருத்துவக் குழுவினரின் பரிசோதனைக்குப் பின்னரே அனுமதிக்கப்படுகின்றனர். இதனால், இரண்டு சோதனைச்சாவடிகளிலும் பல கிலோ மீட்டர் தொலைவுக்கு வாகனங்கள் அணிவகுத்து நிற்பதால், சுற்றுலாப் பயணிகள் சிரமப்படுகின்றனர்.
சுற்றுலாப் பயணிகள் வருகைஅதிகரிப்பால், சுற்றுலாவை மட்டுமே நம்பியுள்ள தொழிலாளர்கள் நிம்மதியடைந்துள்ளனர்.
நீலகிரி மாவட்டத்திலுள்ள அனைத்து சுற்றுலா மையங்களும் முழுமையாகத் திறக்கப்பட்டு, கூடுதலான தளர்வுகளும் அளிக்கப்பட்டுள்ளது.
இதனால், தீபாவளி, கிறிஸ்துமஸ், புத்தாண்டு காலத்தில் முந்தைய நிலையை சுற்றுலாத் தொழில் மீண்டும் அடையும் என்பது தொழிலாளர்களின் கருத்தாக உள்ளது.