தமிழகம் முழுவதும் மாநில எல்லைகளில் துப்பாக்கி ஏந்திய போலீஸார் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டுள்ளனர். தீவிர வாகன சோதனை நடந்து வருகிறது.
தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதால் பாதுகாப்பை பலப்படுத்துமாறு அனைத்து மாநில அரசுகளையும் மத்திய உளவுத் துறை எச்சரித்தது. அதைத் தொடர்ந்து, தமிழகம் முழுவதும் பாதுகாப்பு பலப் படுத்தப்பட்டுள்ளது. ஆங்காங்கே சோதனைகள் நடத்தப்பட்டு, சந்தேக நபர்கள் கைது செய் யப்படுகின்றனர்.
மர்ம நபர்கள் ஊடுருவல்
இதற்கிடையே, 2 நாட்களுக்கு முன்பு கேரள வனப் பகுதிகளில் இருந்து தமிழகத்துக்குள் சந் தேகத்துக்குரிய நபர்கள் சிலர் ஊடுருவ முயற்சிப்பதாக தகவல் கள் வந்தன. அதை தொடர்ந்து, இரு மாநில எல்லையான குமுளி, கம்பம், தேக்கடி பகுதிகளில் உள்ள மலைப் பாதைகளில் போலீஸ் கண்காணிப்பு தீவிரப் படுத்தப்பட்டது. மலைச் சாலை களில் ஆங்காங்கே தடுப்புகள் அமைக்கப்பட்டு, துப்பாக்கி ஏந்திய போலீஸார் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டனர். பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டது.
துப்பாக்கியுடன் 3 வீரர்கள்
அதை தொடர்ந்து, தற்போது தமிழகம் முழுவதும் மாநில எல்லைகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. கேரளா, கர்நாடகா, ஆந்திரா ஆகிய மாநிலங்களின் எல்லைகளில் உள்ள சோதனைச் சாவடிகளில்பாதுகாப்பு, சோதனை பணிகளுக்காக கூடுதலாக போலீஸார் நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஒவ்வொரு சோதனைச் சாவடியிலும் குறைந்தது 3 வீரர்கள் துப்பாக்கி ஏந்திய நிலையில், பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். சந்தேகப்படும் வாகனங்களை நிறுத்தி சோதனை நடத்தப்படுகிறது.
கேரள எல்லைப் பகுதியான கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை சோதனைச் சாவடியில் கடந்த ஜனவரியில் காவல் ஆய்வாளர் வில்சன் கொலை செய்யப்பட்டதால், இதுபோன்ற சம்பவங்கள் சோதனைச் சாவடிகளில் நடக்காமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தை ஒட்டியுள்ள கேரளா, கர்நாடகா வனப் பகுதிகளில் வனச் சரகர்கள் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். மலைப் பகுதிகளில் புதிய நபர்களின் நடமாட்டம் குறித்து அப்பகுதி மக்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.