வாகனங்களில் பதிவெண் சரியான அளவிலும், நிறத்திலும் இருக்க வேண்டும். மீறினால் வாகனம் பறிமுதல் செய்யப்படும் என சென்னை போக்குவரத்து காவல் கூடுதல்ஆணையர் கண்ணன் எச்சரித்துள்ளார்.
இதுதொடர்பாக கூடுதல் காவல் ஆணையர் கண்ணன் நேற்று வெளியிட்ட அறிவிப்பு:
சமீப காலமாக பல வாகனங்களில் உள்ள வாகன பதிவு எண் தகடு (நம்பர் பிளேட்) மோட்டார் வாகன சட்டத்தில் அரசு நிர்ணயித்துள்ள விதிமுறைகளின்படி இல்லாமல் பல்வேறு அளவுகளில் உள்ளது. வாகனபதிவு எண் தகட்டில் பின்பற்றவேண்டிய நிறம், தகட்டின் அளவு, எழுத்து மற்றும் எண்ஆகியவற்றின் அளவு இடைவெளி குறித்த விதிமுறைகள் தெளிவாக வரையறுக்கப்பட்டுள்ளன.
அதன்படி, வாகன பதிவு எண் தகட்டின் எழுத்து மற்றும்அளவு 70 சிசிக்கு குறைவான இஞ்ஜின் திறன் கொண்ட இருசக்கர வாகனங்களில் முன் எழுத்து 15 மிமீ உயரம் இருக்க வேண்டும், தடிமன் 2.5 மிமீ, அதேபோல் இடைவெளி 2.5 மிமீ இருக்க வேண்டும். 500 சிசிக்கு அதிகமான இஞ்ஜின்திறன் கொண்ட மூன்று சக்கர வாகனங்கள் பின் மற்றும் முன் எழுத்து 40 மிமீ உயரம், 10 மிமீ தடிமன், இடைவெளி 5 மிமீ இருக்க வேண்டும்.
இதேபோல் அனைத்து தனியார் வாகன நம்பர் பிளேட்டின் பின்னணி நிறம் வெள்ளையாகவும், அதில் எண் கருப்பு நிறத்திலும் இருக்க வேண்டும். அனைத்து வர்த்தக வாகனங்களிலும் மஞ்சள் நிற நம்பர் பிளேட்டில் கருப்பு எழுத்தில் எண் எழுதி இருக்க வேண்டும்.
2019 ஏப்ரல் 1-ம் தேதிக்கு பின் புதிதாக வாகனப்பதிவு செய்யும் அனைத்து வாகனங்களுக்கும் உயர் பாதுகாப்பு பதிவு எண் தகடு (எச்எஸ்ஆர்பி) பொருத்தப்பட வேண்டும். இதை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், தேவைப்பட்டால் விதிமீறல் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.