தமிழகம்

பயன்படுத்தப்படாத குடிநீர் தொட்டிகள் சீரமைப்பு: குடிநீர் வாரியம் நடவடிக்கை

செய்திப்பிரிவு

சென்னைக்கு நீர் வழங்கி வரும் ஏரிகள் வறண்டு வருவதால் குழாய்கள் மூலம் தண்ணீர் வழங்க இயலவில்லை.

ராயப்பேட்டை, வில்லிவாக்கம், சைதாப்பேட்டை என பல பகுதிகள் குடிநீர் தட்டுப்பாட்டால் மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. சென்னையில் இரண்டு நாட்களுக்கு ஒரு முறை வழங்கப்பட்டு வந்த குடிநீர் நிறுத்தப்பட்டுவிட்டது. தெருக் குழாய்களிலும் போதிய அழுத்தம் இல்லாததால் குடிநீர் கிடைப்பதில்லை. எனவே, குழாய் மூலம் தண்ணீர் கிடைக்காத பகுதிகளுக்கு லாரிகள் மூலம் தண்ணீர் வழங்கப்பட்டு, அவை தெருக்களில் உள்ள பொது குடிநீர் தொட்டிகளில் நிரப்பப் படுகின்றன.

எனவே, பல ஆண்டுகளாக பயன்படுத்தப்படாத குடிநீர் தொட்டிகளை கண்டறிந்து குடிநீர் வாரியம் சீரமைத்து வருகிறது. இதுகுறித்து சென்னை குடிநீர் வாரியம் அளித்துள்ள தகவலின்படி, சென்னை நகரிலுள்ள பழுதடைந்த 1,442 குடிநீர் தொட்டிகள் சரி செய்யப்பட்டுள்ளன. சில இடங்களில் தொட்டிகளின் மேடைகள் மட்டும் பழுதடைந்திருந்தன. இதுவரை 1,105 பழுதடைந்த மேடைகள் புதுப்பிக்கப்பட்டுள்ளன.

இதுதவிர, தற்போதுள்ள குடிநீர் தொட்டிகள் போதவில்லை என்பதால், புதிதாக 625 குடிநீர் தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் 625 குடிநீர் தொட்டிகளுக்கு கொள்முதல் ஆணை வழங்கப்பட்டுள்ளது என்றும் குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது.

SCROLL FOR NEXT