கோப்புப்படம் 
தமிழகம்

கரோனா மாதிரிகளை தவற விட்ட தற்காலிக ஊழியர்கள் பணி நீக்கம்

செய்திப்பிரிவு

ஆத்தூர் அருகே கரோனா தொற்று பரிசோதனைக்கு சேகரிக்கப்பட்ட சளி மாதிரிகள் அடங்கிய டியூப்புகளை தவறவிட்ட தற்காலிக ஊழியர்கள் 2 பேர் பணி நீக்கம் செய்யப்பட்டனர்.

ஆத்தூர் அடுத்த பெத்தநாயக்கன்பாளையம் பேரூராட்சி 1-வது வார்டு தண்ணீர்பந்தல் பகுதியில் கரோனா தொற்று பரிசோதனைக்கு சேகரிக்கப்பட்ட சளி மாதிரி டியூப்புகள் தேசிய நெடுஞ்சாலையில் சிதறிக்கிடந்தன. தகவல் அறிந்து அங்கு சென்ற சுகாதாரத் துறை அதிகாரிகள் அங்கு கிடந்த 8 டியூப்புகளை எடுத்தனர். மேலும், இதுதொடர்பாக மாவட்ட சுகாதாரப் பணிகள்துணை இயக்குநர் செல்வக்குமார் விசாரணை நடத்தினார். விசாரணையில், சாலையில் கிடந்த டியூப்புகள் தலைவாசல் பகுதியில் நடந்த கரோனா பரிசோதனை முகாமில் பொதுமக்களிடம் சேகரிக்கப்பட்டது என்பது தெரிந்தது. மேலும், முகாமில் 87 பேரிடம் மாதிரிகள் சேகரிக்கப்பட்டதும் தெரியவந்தது.

இந்த மாதிரிகளை ஆய்வுக்காக தற்காலிக ஊழியர்கள் சரவணன் மற்றும் செந்தில் ஆகியோர் எடுத்துச் சென்றபோது வழியில் தவறவிட்டது தெரிந்தது.

இதையடுத்து, பணியில் கவனக்குறைவாக இருந்த சரவணன் மற்றும் செந்தில் ஆகியோரை பணி நீக்கம் செய்து மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் செல்வக்குமார் உத்தரவிட்டார்.

SCROLL FOR NEXT