புதுச்சேரி அடுத்த சேதராப்பட்டு தொழிற்பேட்டையில் உள்ள கேபிள் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தால் கரும்புகை வெளியேறுகிறது. படம்: எம்.சாம்ராஜ் 
தமிழகம்

புதுச்சேரி அருகே கேபிள் தொழிற்சாலையில் தீ விபத்து: பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதம்

செய்திப்பிரிவு

புதுச்சேரி அருகே தனியார் கேபிள் தொழிற்சாலையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமானது.

புதுச்சேரி அடுத்த சேதராப்பட் டில் தனியார் கேபிள் வயர் தயாரிக் கும் நிறுவனம் உள்ளது. இங்கு தயாரிக்கப்படும் கேபிள்கள் பல்வேறு இடங்களுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இந்த நிறுவனத்தில் வடமாநில தொழிலாளர்கள் உட்பட 400 தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். கேபிள் வயர் தயாரிக்கும் நிறுவனத்தின் உள்ளே வட மாநில தொழிலாளர்கள் தங்கும் குடியிருப்பும் உள்ளது. நேற்று முன்தினம் காந்தி ஜெயந்தி என்பதால் நிறுவனத்துக்கு விடுமுறை விடப்பட்டு இருந்தது. இதனால் தொழிலாளர்கள் யாரும் வேலைக்கு வரவில்லை.

இந்நிலையில் நேற்று அதிகாலை இந்த நிறுவனத்தில் மூலப்பொருட்கள் வைக்கப்பட்டு இருந்த குடோனில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

இந்த தீ அருகில் இருந்த மற்ற 2 குடோன்களுக்கும் பரவியது. இதனால் அந்த பகுதி முழுவதும் புகை மூட்டம் உருவானது. இதைப்பார்த்த அப்பகுதி மக்கள் அதிர்ச்சி யடைந்தனர்.

இதுகுறித்து உடனடியாக சேதராப்பட்டு போலீஸார் மற்றும் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீஸார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் அங்கு வந்து, குடியிருப்பில் தங்கியிருந்த வடமாநில தொழிலாளர்களை வெளியேற்றினர். தொடர்ந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். தீயை கட்டுப்படுத்த முடியாததால் கோரிமேடு, வில்லியனூர் மற்றும் தமிழகப் பகுதியான வானூர் தீயணைப்பு நிலையங்களுக்கு தகவல் கொடுத்தனர். அங்கிருந்து 20-க்கும் மேற்பட்ட வாகனங்களில் தண்ணீர் கொண்டு வரப்பட்டு சுமார் 6 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

இந்த தீ விபத்தால் குடோன்களில் இருந்த பல லட்சம் ரூபாய் மதிப்பிலான மூலப்பொருட்கள் எரிந்து சேதமானது.

இதுகுறித்து சேதராப்பட்டு போலீஸார் மற்றும் தீயணைப்புத் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT