தமிழகத்தில் தேவையான இடங்களில் நேரடி நெல்கொள்முதல் நிலையங்கள் திறக்க மாவட்ட ஆட்சியர்களுக்கு அனுமதிஅளிக்கப்பட்டு உள்ளதாகவும், நெல்லை பாதுகாக்க பாலிதீன்தார்ப்பாய்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் ஆர்.காமராஜ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை:
தமிழகத்தில் கடந்த கொள்முதல் பருவமான 2019-20-ம் ஆண்டில் 2 ஆயிரத்து 135 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு, 32 லட்சத்து 41 ஆயிரம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டது. இதன் மூலம் விவசாயிகளுக்கு மாநில அரசு வழங்கும் ஊக்கத்தொகை ரூ.205 கோடி சேர்த்து மொத்தம் ரூ.6 ஆயிரத்து 130 கோடி சம்பந்தப்பட்ட விவசாயிகளின் வங்கிக்கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 5 லட்சத்து 85 ஆயிரத்து 241 விவசாயிகள் பயனடைந்துள்ளனர். இந்த கொள்முதல் அளவு, தமிழக வரலாற்றில் அதிகபட்ச கொள்முதல் சாதனையாகும்.
விலை உயர்வு
தற்போது, அக்.1-ம் தேதி தொடங்கியுள்ள 2020-21 கொள்முதல் பருவத்துக்கு குறைந்த பட்ச ஆதார விலையாக குவிண்டால் ஒன்றுக்கு சன்னரகத்துக்கு ரூ.1,888மற்றும் சாதாரண ரகத்துக்கு ரூ.1,868ஆக உயர்த்தி ஆணையிடப்பட்டுள்ளது. இத்துடன் தமிழக அரசின் ஊக்கத் தொகையாக குவிண்டால் ஒன்றுக்கு சன்னரகத்துக்கு ரூ.70, சாதாரண ரகத்துக்குரூ.50ம் சேர்த்து, சன்னரகத்துக்கு ரூ.1958 மற்றும் சாதாரண ரகத்துக்கு ரூ.1918 என விலையில், அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்படும்.
கொள்முதல் விலை உயர்த்தப்பட்டுள்ளதால், கொள்முதல் நிலையங்களில் உள்ள மின்னணு இயந்திரங்களில் தேவையான மாற்றங்கள் செய்யப்பட்டு கொள்முதல் செய்ய அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு, கொள்முதல் பணி அக்.1-ம் தேதி முதல் தொடங்கப்பட்டுள்ளது. காந்தி ஜெயந்தியை முன்னிட்டு அக்.2-ம் தேதி விடுமுறை தினமாகும். எனவே, அக்.3-ம்தேதி நேற்று அனைத்து நேரடிநெல் கொள்முதல் நிலையங்களிலும், விவசாயிகள் நெல்லை உயர்த்தப்பட்ட விலையில் கொள்முதல் செய்யும் பணி நடைபெற்று வருகிறது.
மேலும், நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் உள்ள நெல்லை உடனடியாக கொள்முதல் செய்யும் பொருட்டு அக்.4-ம் தேதி ஞாயிற்றுக்கிழமையான இன்றும் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படும். இதுவரை 591 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் தொடங்கப்பட்டுள்ளன.
தற்போது சில பகுதிகளில் அறுவடைக்கு தயாராக உள்ள நெல்லானது, அறுவடை இயந்திரம் மூலம் விவசாயிகளால் ஒரேநேரத்தில் அறுவடை செய்யப்பட்டுநேரடி நெல் கொள்முதல் நிலையங்களுக்கு கொண்டுவரப்படுகின்றன. இவ்வாறு கொள்முதல் நிலையங்களுக்கு விவசாயிகளால் கொண்டுவரப்படும் நெல்லை பாதுகாப்பாக வைக்க பாலிதீன் தார்பாய்கள் வழங்கப்பட்டுள்ளன.
ஒரு நெல் கொள்முதல் நிலையத்தில் நாள் ஒன்றுக்கு அதிகபட்சமாக ஆயிரம் மூட்டைகள் மட்டுமே கொள்முதல் செய்ய இயலும் என்பதாலும், அதனால் சில நேரடி கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளின் நெல் அதிகளவில் நிலுவையில் இருக்க வாய்ப்புள்ளது என்பதாலும், விவசாயிகளிடம் இருந்து வரும் கோரிக்கைகள் அடிப்படையிலும், தேவையானஇடங்களில் தேவையான எண்ணிக்கைியல் நேரடி நெல்கொள்முதல் நிலையங்கள் திறக்க அனுமதியளிக்கும்படி அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. எனவே, விவசாயிகள் அறுவடை செய்த தங்கள்நெல்லை அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் உயர்த்தப்பட்ட அதிக விலையில் விற்பனை செய்து பயனடையலாம்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.