சென்னை மெட்ரோ ரயில் கழகம் மூலம் ரூ.400 கோடியில் சென்ட்ரல் ரயில் நிலையம் அருகில் உள்ள பகுதிகள் மத்திய சதுக்கமாக மேம்படுத்தப்படும் என முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் இன்று கேள்வி நேரம் முடிந்ததும் பேரவை விதி 110-ன்கீழ் முதல்வர் ஜெயலலிதா வெளியிட்ட அறிவிப்புகள்:
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தைச் சுற்றியுள்ள பகுதிகள், 3 புறநகர் ரயில் பாதைகள், ஒரு துரித ரயில் பாதை, தொலைதூர ரயில் பாதை, தற்போது கட்டுமானத்தில் உள்ள மெட்ரோ ரயில் பாதை ஆகியவை கூடும் இடமாக உள்ளன. வர்த்தக மையமாகவும், அதிக எண்ணிக்கையில் மக்கள் வந்து செல்லும் இடமாகவும் இப்பகுதி உள்ளது. பெருவாரியான பயணிகள் இங்கு வந்து மற்ற பகுதிகளுக்கு செல்ல போக்குவரத்தை மாற்றுகின்றனர்.
அரசு பொது மருத்துவமனை, தெற்கு ரயில்வே தலைமை அலுவலகம், சென்னை மாநகராட்சி தலைமை அலுவலகம், சவுகார்பேட்டை ஆகியவை இந்தப் பகுதியில் உள்ளதால் போக்குவரத்து நெருக்கடி அதிகரித்து வருகிறது.
எனவே, தங்கு தடையற்ற போக்குவரத்து வசதியை ஏற்படுத்த பயணிகளுக்கான வசதிகள், கீழ்தள வாகன நிறுத்தும் வசதி, பாதசாரிகளுக்கான முறையான நடை பாதை, தரைதள வாகன நிறுத்தும் வசதி ஆகியவற்றைக் கொண்ட ஒருங்கிணைந்த பலதரப்பட்ட போக்குவரத்து முறையை ஏற்படுத்த சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமம் நிதி அளிக்கும்.
ரிப்பன் மாளிகை, விக்டோரியா கூடம், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம், தெற்கு ரயில்வே தலைமை அலுவலகக் கட்டிடம், சென்னை மருத்துவக் கல்லூரி, அரசு பொது மருத்துவமனை, பூங்கா நகர், சென்னை பெருந்திரள் திட்ட ரயில் நிலையம், பூங்கா ரயில் நிலையம், ராமசாமி முதலியார் சத்திரம் ஆகியவைகளுக்கு அருகில் உள்ள பகுதிகள் உலகத் தரத்தில் மத்திய சதுக்கமாக மேம்படுத்தப்படும். சென்னை மெட்ரோ ரயில் கழகம் மூலம் ரூ.400 கோடியில் இதற்காக பணிகள் மேற்கொள்ளப்படும்.
சூரியமின் சக்தி கட்டாயம்
அதிகரிக்கும் மின் தேவையை கருத்தில்கொண்டு பல மாடி கட்டிடங்களில் சூரிய மின் சக்தி வசதியை ஏற்படுத்துவதை சட்டப்படி அவசியமாக்க வளர்ச்சி கட்டுப்பாட்டு விதிகளில் உரிய திருத்தங்களை மேற்கொள்ள அரசு நடவடிக்கை எடுக்கும்.
எண்ணூர் துறைமுகத்துக்கு வந்து செல்லும் சரக்குந்து வாகனங்களால் ஏற்படும் போக்குவரத்து நெருக்கடியை குறைக்க, எர்ணாவூர் கிராமத்தில் எண்ணூர் துறைமுகத்துக்கு அருகில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்துக்குச் சொந்தமான 29 ஏக்கர் நிலப்பரப்பில் அனைத்து உள் கட்டமைப்பு வசதிகளுடன் கூடிய சரக்குந்து வாகன நிறுத்துமிடம் கட்டப்படும். தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் மற்றும் சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தின் கூட்டு முயற்சியில் ரூ.100 கோடியில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படும்.
இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.