தமிழகம்

கிரானைட் குவாரி நரபலி வழக்கை சிபிஐ-க்கு மாற்றுக: ராமதாஸ்

செய்திப்பிரிவு

கிரானைட் குவாரி நரபலி குற்றச்சாற்றுட்டுக்கள் குறித்து சிபிஐ விசாரணைக்கு தமிழக அரசு ஆணையிட வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் இன்று (சனிக்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையில், "மதுரை மாவட்டம் மேலூர் வட்டம் கீழவளவு சின்னமலம்பட்டியில் நரபலி கொடுக்கப்பட்டிருக்கலாம் என்ற ஐயத்தின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வரும் தோண்டுதல் பணியில் நேற்று (வெள்ளிக்கிழமை) மேலும் இருவரின் எலும்புக் கூடுகள் கண்டெடுக்கப்பட்டிருக்கின்றன.

கடந்த ஞாயிற்றுக்கிழமை இதே இடத்தில் 4 எலும்புக்கூடுகள் எடுக்கப்பட்ட நிலையில் மேலும் 2 கூடுகள் கிடைத்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது.

மதுரை மாவட்டத்தில் நடைபெற்ற கிரானைட் ஊழல்கள் குறித்து சட்ட ஆணையர் சகாயம் கடந்த 10 மாதங்களாக நடத்தி வரும் விசாரணையில் வெளியான தகவல்கள் அனைத்தும் அதிர்ச்சியளிக்கும் வகையில் உள்ளன.

அரிய இயற்கை வளமான கிரானைட்டை கொள்ளையடிப்பதற்கு எவையெல்லாம் தடையாக இருந்தனவோ, அவை அனைத்தையும் கிரானைட் கொள்ளையர்கள் கொடூரமாக அகற்றி இருப்பது தெரியவந்துள்ளது.

கிரானைட் கொள்ளைக்காக அரசு மற்றும் தனியாருக்கு சொந்தமான நிலங்கள் மிரட்டிப் பறிக்கப்பட்டுள்ளன. இவற்றையெல்லாம் விஞ்சும் வகையில் தங்களின் சட்டவிரோத தொழில் செழிப்பதற்காக பலரை நரபலி கொடுத்ததாக குற்றச்சாற்றுட்டு எழுந்துள்ளது.

இக்குற்றச்சாற்றின் அடிப்படையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை தொடங்கி 2 கட்டங்களாக நடத்தப்பட்ட தோண்டுதல் பணியில் மொத்தம் 6 எலும்புக் கூடுகள் கிடைத்துள்ளன. இன்னும் எத்தனை எலும்புக்கூடு கிடைக்கும் என்பது தெரியவில்லை.

கடந்த ஞாயிற்றுக்கிழமை எலும்புக் கூடுகள் கிடைத்த போது, அத்துடன் பூஜை செய்யப்பட்ட பொருட்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளன. நேற்று கிடைத்த 2 எலும்புக் கூடுகளுடன் மஞ்சள் துணியில் முடியப்பட்ட ஒரு ரூபாய் நாணயமும் கைப்பற்றப்பட்டுள்ளது.

இவற்றை வைத்துப் பார்க்கும்போது அங்கு நரபலி கொடுக்கப்பட்டிருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதை புரிந்துகொள்ள முடிகிறது. கிடைத்துள்ள ஆதாரங்கள் நரபலி குறித்த ஐயங்களை உறுதிப்படுத்துகின்றன.

எலும்புக்கூடுகள் கிடைத்த இடம் இடுகாடு என்றும், அதனால் தான் அங்கு தோண்டத் தோண்ட எலும்புக்கூடுகள் கிடைக்கின்றன என்றும் கூறி இந்த பிரச்சினையை திசை திருப்ப முயற்சி நடக்கிறது.

ஆனால், அந்த இடம் இடுகாடு இல்லை என்றும், வருவாய்த் துறை பதிவேட்டில் அவ்வாறு குறிப்பிடப்பட வில்லை என்றும் சட்ட ஆணையர் சகாயம் குறிப்பிட்டிருக்கிறார்.

நரபலி குற்றச்சாற்றுகள் குறித்து கிரானைட் நிறுவன அதிபரிடம் 10 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடத்தப்பட்ட போதிலும், அதில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.

அதுமட்டுமின்றி, நரபலி குற்றச்சாற்றுக்கு உள்ளானவர்கள் அரசியல் ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் வலிமையானவர்கள். மதுரை மாவட்ட காவல்துறையினர் கடந்த காலங்களில் அவர்களுக்கு சாதகமாக செயல்பட்டுள்ளனர்.

இதற்கு முன் பலமுறை நரபலி குற்றச்சாட்டு எழுந்த போது அதை விசாரிக்க காவல்துறையினர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதற்கெல்லாம் மேலாக தமிழக காவல்துறை மீது நம்பிக்கை இல்லை என்று சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியே கூறியிருக்கிறார். இத்தகைய சூழலில் கிரானைட் குவாரி நரபலி குற்றச்சாற்றுக்கள் குறித்து நடுவண் புலனாய்வுப் பிரிவு (C.B.I) விசாரணைக்கு தமிழக அரசு ஆணையிட வேண்டும்" என ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT