தமிழகம்

தேனி பண்ணைவீட்டில் கட்சியினருடன் ஓபிஎஸ் தீவிர ஆலோசனை

என்.கணேஷ்ராஜ்

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள தனது பண்ணைவீட்டில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று கட்சியினருடன் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டார்.

அதிமுகவில் முதல்வர் வேட்பாளர் யார் என்பது குறித்த விவாதம் சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. இதற்காக முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரது ஆதரவாளர்கள் மறைமுகமாக ஒவ்வொருவருக்கும் ஆதரவளித்து வருகின்றனர்.

இந்நிலையில் வரும் 7-ம் தேதி முதல்வர் வேட்பாளர் யார் என்பது குறித்து அறிவிக்கப்பட உள்ளது..

இந்நிலையில் நேற்று துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சென்னையில் இருந்து கார் மூலம் சொந்த ஊரான பெரியகுளத்திற்கு வந்தார்.

இரவு 8 மணிக்கு வடக்கு அக்ரஹாரத்தில் உள்ள அவரது இல்லம் அருகே மாவட்டச் செயலாளர் சையதுகான், கம்பம் சட்டமன்ற உறுப்பினர் ஜக்கையன், பெரியகுளம் ஒன்றியச் செயலாளர்கள் செல்லமுத்து, அன்னபிரகாஷ் உள்ளிட்ட பலரும் அவரை வரவேற்றனர்.

அவர்களுடன் துணைமுதல்வர் சிறிதுநேரம் ஆலோசனை நடத்தினார்.

பின்னர் அவரது மகனும், தேனி பாராளுமன்ற உறுப்பினர் ப.ரவீந்திரநாத்தின் மகனான ஜெய்தீப்பின் பிறந்தநாளை கொண்டாடினார்.

இரவு உணவிற்குப் பிறகு பெரியகுளம் அருகே உள்ள கைலாசபட்டியில் உள்ள தனது பண்ணை வீட்டிற்குச் சென்று தங்கினார்.

இன்று காலை 11 மணியில்இருந்து தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் அதிமுக நிர்வாகிகள் ஏராளமானோர் ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்தனர்.

தேனி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆர்டி.கணேசன், சிவகங்கை மாவட்ட துணைச் செயலாளர் கருப்பையா, விருதுநகர் மாவட்ட அன்னை சத்யா எம்ஜிஆர்.மன்ற மாநில பொதுச் செயலாளர் முனீஸ்வரன், கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட மீனவர் அணி துணைத் தலைவர் எல்பின்ஸ்டன், விருதுநகர் மாவட்ட எம்ஜிஆர்.மன்ற துணைச் செயலாளர் நாகராஜன், அருப்புக்கோட்டை நகர மகளிர் அணி செயலாளர் பிரேமா, திருவண்ணாமலை மகளிர் அணி வடக்கு மாவட்ட செயலாளர் இந்திரா உட்பட தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் கட்சி நிர்வாகிகள் இவரைச் சந்தித்தனர்.

இது குறித்து கட்சியினர்கூறுகையில், "தற்போது முதல்வர் வேட்பாளர் குறித்த கருத்து வலுப்பெற்று வருகிறது. எனவே பல மாவட்டங்களிலும் உள்ள நிர்வாகிகள் இவரை சந்தித்து ஆதரவு தெரிவித்தோம்" என்றனர்.

தேனி அருகே நாகலாபுரத்தில் நாளை கடனுதவி வழங்குதல் உள்ளிட்ட நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதில் ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்க உள்ளார். இருப்பினும் 5,6,7-ம் தேதிகளில் ஓ.பன்னீர்செல்வம் சென்னை செல்ல வாய்ப்பு உள்ளதாகவே தெரிகிறது.

SCROLL FOR NEXT