பிரதிநிதித்துவப் படம். 
தமிழகம்

கரோனாவால் 80 சதவீதம் நுரையீரல் பாதிக்கப்பட்ட கர்ப்பிணியை அனுமதிக்க மறுத்த தனியார் மருத்துவமனைகள்: உயிரைக் காப்பாற்றிய கோவை இஎஸ்ஐ மருத்துவமனை

க.சக்திவேல்

கரோனாவால் 80 சதவீதம் நுரையீரல் பாதிக்கப்பட்டதால் தனியார் மருத்துவமனைகளில் அனுமதி மறுக்கப்பட்ட கர்ப்பிணி, கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று நலமுடன் வீடு திரும்பியுள்ளார்.

கோவை ரத்தினபுரியைச் சேர்ந்த 35 வயதான பெண்ணுக்குத் திருமணமாகி 15 ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லாத காரணத்தால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இதையடுத்து, செயற்கை முறையில் கரு உருவானது. 8 மாதக் கர்ப்பிணியாக இருந்த நிலையில், அவருக்குக் கரோனா தொற்று ஏற்பட்டது. கிசிச்சைக்காக பல தனியார் மருத்துவமனைகளை அணுகியும், அவர் உள்நோயாளியாக அனுமதிக்கப்படவில்லை.

கடைசியாக, இ.எஸ்.ஐ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்குப் பரிசோதனை மேற்கொண்டதில், தொற்றால் நுரையீரலில் 80 சதவீதம் பாதிப்பு ஏற்பட்டுள்ளதும், நுரையீரலின் வேலை செய்யும் திறன் வெகுவாகக் குறைந்திருந்ததும் தெரியவந்தது. இந்நிலையில் தீவிர சிகிச்சை அளித்து கர்ப்பிணியை இ.எஸ்.ஐ மருத்துவர்கள் காப்பாற்றியுள்ளனர்.

இதுதொடர்பாக மருத்துவமனையின் டீன் ஏ.நிர்மலா கூறியதாவது:

"நீண்ட காலம் கழித்து குழந்தை உருவான நிலையில் தாய், குழந்தையின் உயிருக்கு ஆபத்து இருப்பதை அறிந்து அவர்களைக் காப்பாற்ற பொதுமருத்துவத்துறை நிபுணர் த.ரவிக்குமார் தலைமையில் மருத்துவக் குழு அமைக்கப்பட்டது.

அதைத் தொடர்ந்து மயக்கவியல் துறை தலைமை மருத்துவர் கனகராஜ், சண்முகவேல், மகப்பேறு துறை தலைமை மருத்துவர் கீதா ஆகியோர் கர்ப்பிணியைத் தொடர்ந்து கவனித்து வந்தனர்.

கர்ப்பிணிக்கு அதிக ஆக்சிஜன் அளிக்கப்பட்டு, பின்னர் படிப்படியாக ஆக்சிஜன் அளவு குறைக்கப்பட்டது. கரோனா சிகிச்சைக்காக பிரத்யேகமான மருந்துகள் அளிக்கப்பட்டன. இவ்வாறான சூழலில் உள்ள தாயின் கருவில் உள்ள குழந்தை இறப்பதற்கான வாய்ப்பும், வளர்ச்சி குறைவதற்கான வாய்ப்பும் இருந்ததால் குழந்தையைக் கண்காணிக்கும் வகையில் மூன்று முறை யு.எஸ்.ஜி. ஸ்கேன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. தொடர் தீவிர சிகிச்சைக்குப் பின் கர்ப்பிணி நலமுடன் வீடு திரும்பியுள்ளார்".

இவ்வாறு டீன் நிர்மலாகூறினார்.

SCROLL FOR NEXT